மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஏப் 2018

சினிமா ஸ்டிரைக்: ஆறிலும் பிழை, நூறிலும் பிழை!

சினிமா ஸ்டிரைக்: ஆறிலும் பிழை, நூறிலும் பிழை!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 42

இராமானுஜம்

தமிழ்த் திரையுலகம் தனது வரலாற்றில் இப்படியொரு நீண்ட வேலைநிறுத்தத்தைச் சந்தித்தது இல்லை. அப்படியே திரையுலகில் பிரச்சினை, வேலைநிறுத்தம் என்றால் தமிழக அரசு தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவந்த வரலாறுகள் ஏற்கெனவே உண்டு.

‘அரசியல்வாதிகள் தங்கள் கடமையைச் செய்யவில்லை’ என்று கமல்ஹாசனும், அவரைத் தொடர்ந்து, ‘ஜெயலலிதா மறைவுக்குப் பின் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. சிஸ்டம் சரியில்லை’ என்று கூறி, ‘என்னை ஆளாக்கிய தமிழ் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று நடிகர் ரஜினிகாந்த்தும் முரசு கொட்டி அரசியல்களம் புகுந்திருக்கிறார்கள் .

இவர்கள் நடித்த படங்களும் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. தமிழ்த் திரையுலகில் எந்த விழா என்றாலும் முன்னிலைப்படுத்தப்படுகின்ற இரு ஆளுமைகளும் தமிழ்த் திரையுலகம் முடங்கியிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு துரும்பைகூடக் கிள்ளிப் போடவில்லை.

தலைமுறை இடைவெளியும், தலைமைப் பண்புக்கான முதிர்ச்சியும் இல்லாததால் திரையரங்கு உரிமையாளர்களுடன் இணக்கம் காட்டி பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளால் முடியவில்லை. ஒரு மெல்லிய கோடு இரு தரப்பையும் இணக்கமாக நெருங்கிவர விடாமல் ஒவ்வொரு பிரச்சினையாகப் பேசவைத்து பிரச்சினையைப் பெரிதாக்கியுள்ளது. குறிப்பிட்ட சிலரின் நலனுக்காகத் தமிழகம் முழுக்க இருக்கிற ஒற்றைத் திரையரங்குகள் இலவு காத்த கிளியாக எப்போது புதிய படங்கள் வெளியாகும் எனக் காத்திருக்கின்றன.

கடைசியாக இரு தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதற்குத் தயார் எனக் கூறியும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தையைச் சுமுகமாக முடிக்க விருப்பமின்றி முறிவுக்குக்கொண்டு வந்தார் என்கிறது தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பு. இதற்கு அடிப்படையான காரணம் என்ன என்கிற விசாரணையில் இறங்கியபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.

அரசியல்வாதிகள் கூட்டத்தைக் காட்டி தங்கள் தலைமையிடம் பணம் வாங்குவதைப் போன்று தமிழகத்தில் உள்ள ஒற்றைத் திரையரங்குகளை சங்க ஒற்றுமை என்ற ஒற்றை வார்த்தையை வைத்து தங்கள் பலமாகக் காட்டி கியூப் மற்றும் BookMyShow நிறுவனங்களிடம் அதிகளவு தொழில்நுட்ப வசதிகளையும், முன்பணமாகக் கோடிக்கணக்கில் பெற்று தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி வருகின்ற தனி நபர்கள் செயலாளர் பன்னீர்செல்வத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, தங்கள் விருப்பப்படி செயல்படும் நபராக மாற்றியுள்ளனர்.

கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் தமிழ்ப் படங்கள் திரையிட்டு வசூலான தொகையில் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி ரூ.5 கோடியே 25 லட்சம். இத்திரையரங்கின் உரிமையாளர் பன்னீர்செல்வம்தான் திரையரங்க உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர். இவரால் எப்படி நியாயம் பேச முடியும் என்பது தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பின் கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. இதிலிருந்து இவரைக் காக்கும் முயற்சியில் முக்கிய நபர்கள் முன் நிற்பதால் அவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் பன்னீர் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இரு தரப்பு பேச்சுவார்த்தையைச் சுமுகமாகவும், விட்டுக்கொடுத்தும் நடத்தக்கூடிய அனுபவமும் ஆளுமையும்மிக்க திருப்பூர் சுப்பிரமணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளக்கூடாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியது அவர்களுக்குப் பெறும் பின்னடைவாக அமைந்துவிட்டது. வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அவ்வப்போது தருமனாக மாறி ஆலோசனைகளைச் சமூக வலைதளத்தில் அறிவித்தாலும் அதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி செய்யவில்லை. திருப்பூர் சுப்பிரமணியும் விஷால் தரப்பும் யாருடைய தலையீடும், குறுக்கீடும் இன்றி பேச்சுவார்த்தை நடத்தினால் உடனடித் தீர்வு ஏற்படும்.

அப்படியோர் அதிசயம் நடந்து தமிழ் சினிமாவுக்கு நல்லது நடந்துவிடக் கூடாது என்பதில் சில பீமன்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். டிஜிட்டல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றுதான் தயாரிப்பாளர்கள் சங்கம் தென்மாநிலங்களுடன் இணைந்து போராட்டத்தை தொடங்கியது. இப்போது தனியாக போராடிக்கொண்டுள்ளது. அவர்கள் கேட்கிற ஒற்றைக் கேள்விக்குத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனம் இதுவரை நேரடியாகப் பதில் கூறாமல் மௌனம் காக்கின்றனர். அது என்ன கேள்வி?

‘டிஜிட்டல் புரொஜக்டருக்கு திரையரங்க உரிமையாளர்கள் பணம் கொடுக்காததால் டிஜிட்டல் கட்டணம் மற்றும் விளம்பரக் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகை எடுத்துக்கொள்வதாக கியூப் நிறுவனம் கூறுகிறது. அப்படியென்றால் புரொஜக்டர் கடன் இன்னும் முழுமையாகவில்லையா? அல்லது எப்போது கடன் அடையும்? அதுவரை VPF கட்டணத்தைக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்கிறார் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் பிரபு. ஆனால், அதற்கான காலக்கெடு முக்கியம் என்கிறார். “சொந்த புரொஜக்டர் வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள், நாங்கள் செலுத்திய VPF கட்டணத்தை கியூப் மூலமாகத் திரும்ப பெற்றுக்கொண்டது நியாயமா? சரி, இந்தத் தியேட்டர்களுக்கு இனிமேல் நாங்கள் ஏன் VPF கட்ட வேண்டும்?” என்றும் கேட்கிறார்.

இங்கு தான் தமிழக சினிமாவை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரத் திட்டமிட்டு வேலைகளைச் செய்து வருபவர்கள் முகம் காட்டுகிறார்கள். இதில் பிரதான இடம்பிடிப்பவர்கள் வேலுர் சீனிவாசன், கோவை ராஜமன்னார், தென்காசி பிரதாப் ராஜா இவர்களுடன் சேலம் சிண்டிகேட் குரூப்.

மேற்குறிப்பிட்ட மூவருமே கியூப், BookMyShow ஆகியோரிடம் அட்வான்ஸ் என்பதன் பெயரால் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று தொடர்ந்து தியேட்டர்களைத் தங்கள் வசப்படுத்தி வருகின்றனர். தற்போதைய வேலைநிறுத்தத்தால் பெரும் நஷ்டம் அடைந்த தியேட்டர்கள் இத்தொழிலை விட்டுவிடும் முடிவில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தியேட்டர்களை கையகப்படுத்தி தங்களது பலத்தை உயர்த்தும் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சமரச, சுமுக முடிவுக்கு ஒப்புக்கொண்டால் கியூப், BookMyShow மூலம் வருகின்ற வருமானம் தடைபடும். இதன் காரணமாகவே “தமிழக அமைச்சர்களிடம் பேசிவிட்டோம். இனி எம்.ஜி கிடையாது, அட்வான்ஸ்கூட அப்போது பார்த்து கொள்ளலாம். 50 - 50% பங்கு என அரசிடம் அனுமதிக்கு க.டிதம் கொடுத்துள்ளோம்” எனத் திரையரங்கு உரிமையாளர்களிடம் வாய் வீரம் பேசுபவர்கள், கியூப் நிறுவனத்திடம் கட்டணத்தைக் குறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ராஜமன்னார், சீனிவாசன், இருவரும் அடிப்படையில் விநியோகஸ்தர்கள். இவர்கள் வாங்கும் படங்களுக்கு 75% டேர்ம்ஸில்தான் படம் கொடுப்பார்கள். நம்மை ரட்சிக்கவந்த தேவதூதர்கள் என இவர்களை நம்பி அப்பாவி தியேட்டர் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், ஒற்றைத் தியேட்டர்களை எண்ணிக்கைக் கணக்குக் காண்பித்து பகடையாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது இந்த ஐவர் அணி. பஞ்சபாண்டவர் அணியின் பகடையாட்டத்தில் பலியாகப் போவது ஒற்றைத் திரையரங்கமா? இல்லை இவர்களால் இதுவரை எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களா?

நாளை... சத்யம் சினிமாஸ் சொரூப் ரெட்டியின் பகடையாட்டம்...

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 13 ஏப் 2018