மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஏப் 2018

தியேட்டர் விசில் சத்தத்தின் சாவி யார் கையில்?

தியேட்டர் விசில் சத்தத்தின் சாவி யார் கையில்?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 43

இராமானுஜம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தாலும் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே படம் தயாரிப்பவர்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் 1,100. இவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிர்வகிப்பது 20% தியேட்டர்களை. குறிப்பிட்ட சில நபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது 40% தியேட்டர்கள். இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமா வேலைநிறுத்தம் பற்றி இவ்வளவு எழுத வேண்டுமா என நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள். நியாயமான கேள்விதான்.

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய போது அவர்கள் நலன் சார்ந்த விஷயமாகவே அது பார்க்கப்பட்டது. போராட்டம் கட்டுக்கோப்புடன் தொடர்ந்தபோது தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் மக்கள் நலன் சார்ந்தவையாக மாறியது, தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாதது. தங்கள் தொழில் வளமுடன் தொடர வேண்டுமென்றால் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளையும் இணைத்துக் கொண்டு முதலாளிகள் போராடுவார்கள். அந்த வகையான போராட்டமிது.

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் படம் பார்க்கும் பழக்கம் குறைந்துவருகிறது; இதனால் வசூல் குறைகிறது. எதிர்பார்த்த வருமானம் தயாரிப்பாளருக்குக் கிடைப்பதில்லை. எனவே, டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்துகின்ற திரையரங்குகளில் தின்பண்டங்களின் விலை வெளி மார்க்கெட்டைக் காட்டிலும் மும்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் ஆகும் செலவைக் கணக்கிட்டுப் படம் பார்க்க சமீபகாலமாகக் குடும்பங்கள் வருவதில்லை. குடும்பங்கள் வரவில்லை என்றால் வசூல் அதிகரிக்காது. அதனால் தியேட்டரில் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாய விலையில் விற்கப்பட வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சினிமா தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அவர்கள் மக்களின் ஒரு பகுதியினர்தாம்.

மேலே குறிப்பிட்ட தொடர்புகளை தொகுத்துப் பார்க்கும்போது நடைபெற்று வரும் போராட்டம், மக்கள் நலனை உள்ளடக்கிய போராட்டம் என்பதை யாராலும் புறக்கணிக்க முடியாது. எனவே, எத்தனைப் பேர் முன்னிற்கிறார்கள் என்பதைக் கணக்கிடாமல், எத்தனைப் பேர் பயன்பெறுவார்கள் என்று கணக்கிடும்போது இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் தானே தெரியும்.

கடந்த 43 நாள்களாக நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தையொட்டி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசாங்கத்துக்கு நியாயமான வரி வருவாய் கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாட்டத்துடன் தியேட்டருக்கு வரத் தொடங்குவார்கள். தியேட்டர், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் வருவாய் அதிகரிக்கும். அப்படியொரு அதிசயம் நடந்துவிடக் கூடாது என விநியோகம், திரையரங்கு இவற்றில் ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள், ஒற்றைத் திரையரங்கு உரிமையாளர்களுக்குத் தவறான வாக்குறுதிகளைக் கொடுத்து, மொத்த திரையரங்க உரிமையாளர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். இவர்களது கூட்டாளியாக சத்யம் சினிமாஸ் உரிமையாளர் செயல்படுகிறார் என்கின்றனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.

நாட்டுப்புற பஞ்சாயத்துகளில் நகரத்தில் படித்துவிட்டு வருபவன் வாக்குக்கும், வெள்ளை சட்டை மட்டும் அணிபவர்களின் பேச்சுக்கும் தனி மரியாதை உண்டு. அவரே சொல்லிட்டாரா அப்ப உண்மையாகத்தான் இருக்கும் என்பார்கள். கிட்டத்தட்ட வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல.

அது போன்றுதான் சத்யம் சினிமாஸ் உரிமையாளர் சொரூப் ரெட்டி திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதும் பேசப்படுகிறது. ஆனால், அவரது திரையரங்கில் வேலைநிறுத்தம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ்மொழி தவிர்த்து பிற மொழிப் படங்களைத் திரையிட்டு வருகிறார். இந்த உண்மை கடைக்கோடி நகரத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளருக்குத் தெரியாது. தங்கள் பலத்தை வைத்து சத்யம் தியேட்டர் உரிமையாளரும், அவருடன் இணைந்தவர்களும் பலனடைந்து வருவதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை.

திரையுலக நலன் சார்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் எப்போது போராட்டம் நடத்தினாலும் அதில் சத்யம் தியேட்டர் பங்கேற்பது இல்லை. ஆனால், இப்போது நடைபெற்றுவரும் போராட்டத்தையொட்டி கூட்டப்படும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் சத்யம் சினிமாஸ் சொரூப் ரெட்டி கலந்து கொள்கிறார். காரணம் என்ன?

சத்யம் சினிமாஸ் நடத்திவரும் அனைத்துத் தியேட்டர்களிலும் இருப்பது சொந்த புரொஜக்டர். ஆனால், தங்கள் படங்களுக்குத் தயாரிப்பாளர்கள் VPF கட்டணம் செலுத்தியதை கொல்லைப்புற வழியாக இதுவரை வாங்கிக் கொண்டிருந்தது. இதை நியாயப்படுத்தி சிண்டிகேட் தியேட்டர் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இது தெரியாமல் ஒற்றைத் திரையரங்கு உரிமையாளர்கள் தவிப்புடன் தடுமாறி வருகின்றனர்.

தமிழகத்தில் தொழில் செய்து வரும் சத்யம் சினிமாஸ், இதுவரை அதிகளவில் திரையிட்டது வேற்று மொழி திரைப்படங்களை. அதன் உரிமையாளர், இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தமிழ் படங்கள் பற்றி முடிவெடுக்கும் இடத்துக்கு எப்படி வரலாம் என்ற முணுமுணுப்புகள் வரத்தொடங்கியுள்ளன.

VPF கட்டணத்தின் பெயரால் வரக்கூடிய வருவாயில் கியூப் நிர்வாகம் அதிகளவு பங்கு கொடுத்தது சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்குத்தான் என்கின்றனர். தயாரிப்பாளர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் சொந்த புரொஜக்டர் வைத்திருப்பவர்கள் கூடுதல் வருமானத்தை இழக்க நேரிடும். அதனால்தான் பொதுமக்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்குகளுக்கும் பயன் கிடைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் முயற்சிக்கு சத்யம் தியேட்டர் உரிமையாளர், வேலூர் சீனிவாசன், கோவை ராஜமன்னார் பிரதாப் ராஜா ஆகியோரால் பகடையாக பயன்படுத்தப்படுகிறார் என்கின்றனர்.

இது போன்ற அநீதிக்குத் துணை நிற்கும் சத்யம் சினிமாஸ் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வரமா? சாபமா? தயாரிப்பாளர்கள் வருமானத்தை எப்படி சுரண்டுகிறது சத்யம் சினிமாஸ்?

நாளை காலை 7 மணிக்கு.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 14 ஏப் 2018