மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 14 அக் 2019

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர்

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர்

நாடெங்கும் பிரிவினைத் தீ சுட்டெரித்துக்கொண்டிருக்கும் நிலையில்... நம் காதில் விழும், கண்ணில் படும், நெஞ்சைத் தொடும், அறிவை விரிவு செய்யும் ஒருமைப்பாட்டு கிரணங்களை அதிகரிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

அப்படி ஓர் ஒற்றுமைக் கீற்றை ஓங்கி ஒலிப்பதற்குத்தான் இந்தச் செய்தி.

தெலங்கானா மாநில திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், பிராமண வைணவருமான ரங்கராஜன் நாளை (ஏப்ரல் 16) ராமானுஜரின் வழியில் ஒரு சமகால சரித்திரத்தை அரங்கேற்ற இருக்கிறார். தலித் பக்தர்களை தன் தோளில் சுமந்துகொண்டு கோயிலுக்குச் செல்ல இருக்கிறார் இந்த வைணவ அறிஞர். அவரை வைத்தே பூஜையும் செய்ய இருக்கிறார்.

சாதி பார்த்தால் வைணவம் இல்லை, வைணவம் பார்த்தால் சாதி இல்லை என்று ராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றிய கொள்கை தீபத்தை ஏந்திக்கொண்டு, தன் தோள்களில் ஆதித்ய பராஸ்ரி என்ற தலித் பக்தரை தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்கிறார் அறுபது வயதான வேத அறிஞர் ரங்கராஜன். தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் ஜியகூடா பகுதியில் இருக்கும் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில்தான் இந்த நிகழ்வு நாளை நடக்க இருக்கிறது.

“நாட்டுக்குச் சமத்துவத்துக்கான செய்தியைச் சொல்வதற்காகவே இந்த நிகழ்வை நான் நடத்த இருக்கிறேன். அதிலும் குறிப்பாக வைணவ ஆசாரியர் ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு அவதார வருடத்தைக் கொண்டாடி இப்போது ஆயிரத்து ஒன்றாவது திருநட்சத்திரத்தைக் கொண்டாடும் நிலையில் அனைவரும் சமம் என்பதற்கான ஓர் அறிவிப்பாக இதை நடத்துகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் ரங்கராஜன்.

மின்னம்பலம் வாசகர்களுக்கு ராமானுஜரையும் உறங்காவில்லிதாசரையும் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான். இருந்தாலும் ஹைதராபாத்தில் இப்போது ரங்கராஜன் செய்ய இருப்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜரும், அதற்கு முன்பே திருப்பாணாழ்வாருக்காகத் திருமாலுமே செய்துவிட்டதாக நம்மிடம் குருபரம்பரைக் குறிப்புகள் இருக்கின்றன. ஹைதராபாத் ரங்கராஜனை நினைத்துக்கொண்டே கொஞ்சம் திருவரங்கத்துக்குச் சென்று வருவோம்.

குறியீடு ஆன உறங்காவில்லி தோள்பட்டை

ராமானுஜர் திருவரங்கத்தில் சேரன் மடத்தில் தங்கி வைணவப் பணியாற்றியபோது ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சேரன் மடத்தில் இருந்து காவிரிக்குக் குளிக்கச் செல்லுவார். குளிக்கச் செல்லும்போது பிராமண சமூகத்தைச் சேர்ந்த சிஷ்யர் முதலியாண்டான் மீது தோளில் கை போட்டுச் செல்லுவார். குளித்துவிட்டு வரும்போது எந்தச் சமூகம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ, அந்தச் சமூகத்தை சேர்ந்த உறங்காவில்லிதாசரின் தோளில் கை போட்டபடி திரும்புவார். குளித்துவிட்டு ஈர ஆடையுடன் காவிரி கரையில் இருந்து மடம் வரைக்கும் உறங்காவில்லிதாசரின் தோள்பட்டையில் கை போட்டபடி ராமானுஜர் செல்லும் காட்சியே ஸ்ரீரங்கத்துக்கு பெரும் செய்தியாகிப் போனது.

இந்தக் காட்சி திருவரங்கத்தில் உள்ள அக்ரஹாரத்து மனிதர்களுக்கும், கோயிலில் இருந்த சில தீவிர பிராமணர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்களுக்கு மட்டுமல்ல... ராமானுஜரின் கூட இருக்கும் சில பிராமண சிஷ்யர்களுக்கே கூட பிடிக்கவில்லை. ஆனாலும் ராமானுஜர் கவலைப்படவில்லை. மேலும் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்துகொண்ட மனிதன் அவன் எந்தச் சாதியாக இருந்தாலும் அதையெல்லாம் கடந்து வைணவன் ஆகிவிடுகிறான். வைணவனுக்குச் சாதி இல்லை என்பதுதான் ராமானுஜரின் நடைமுறை சித்தாந்தம்.

இதை உணர்த்துவதற்காகத்தான் குளிக்க போகும்போது இல்லாமல்... குளித்துவிட்டு வரும்போது உறங்காவில்லிதாசரின் தோள் மீது கை போட்டு வருவார் ராமானுஜர். ராமானுஜர் கைவைத்த உறங்காவில்லிதாசரின் தோள்பட்டை அந்தக் காலத்தில் சாதி மறுப்பின் மிகப் பெரிய குறியீடு.

ரத்தம் சிந்திய அரங்கன்

நாளை (மே 16) வைணவ அறிஞர் ரங்கராஜன் ஹைதராபாத்தில் நடத்த இருக்கும் புரட்சி நிகழ்வின் மூல வித்து ராமானுஜர் காலத்துக்கு முன்பே ஆழ்வார்கள் காலத்திலேயே விழுந்தது. இதிலும் முக்கியப் பங்கு வகிப்பது திருவரங்கத்து அரங்கநாதனே. இதை ’ரத்தம் சிந்திய அரங்கன்’ என்ற தலைப்பில் ஏற்கெனவே நாம் மின்னம்பலத்தில் பார்த்திருக்கிறோம். அதன் ஒரு சிறிய மீள் பார்வை இதோ....

தமிழிசையைப் பண் என்னும் பாடல்களாக பாடிவந்த இசை மரபினர்தான் பாணர்கள் என்று அழைக்கப்பட்டனர். மன்னராலும் மக்களாலும் ஆதரிக்கப்பட்ட மிகப் பழைமை வாய்ந்த பாணர் குலம், தாழ்ந்த வகுப்பாகவே கருதப்பட்டது. உயர்ந்த குலத்தோரால் ஒதுக்கப்பட்ட பாணர்கள் ஒடுங்கி அடங்கி வாழ்ந்தார்கள். இசைக்கலாம், அந்த இசை மூலம் பிழைக்கலாம். மற்றபடி ஆலயங்களுக்குள் செல்வது உட்பட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன.

திருவரங்கத்தில் கோயில்கொண்டிருக்கும் அரங்கநாதன் மீது பெரிதும் பக்தி கொண்டார் ஒரு பாணர். உள்ளம் அரங்கனைத் தீண்டினாலும், அவர் பிறந்த குலம் திருவரங்கத்தையே மிதிக்க முடியாமல் அவரைத் தடுத்து வைத்தது. அதனால் காவிரிக்கு இக்கரையிலேயே நின்று அரங்கனின் கோயிலைப் பார்த்து தன் பக்தியை இசையாகப் பாடி வந்தார்.

அப்போது திருவரங்கம் கோயிலில் பணியாற்றிய லோக சாரங்கர் என்ற பட்டர் ஒரு நாள் கோயிலுக்கு அவசரமாகச் செல்கையில், பாணரின் பாடலைக் கேட்டார். இசை வந்த திசை நோக்கித் திரும்பிச் சென்று பாணரைப் பார்த்தார். அழைத்தார்... சத்தம் போட்டு அழைத்தார். ஆனாலும் பாணர் திரும்பவில்லை. இசையிலேயே லயித்து அரங்கனை நினைத்துக் கொண்டிருந்தார். கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தும் திரும்பாததால், கோபமான பட்டர் ஒரு கல்லை எடுத்து பாணரை நோக்கி எறிந்தார் லோக சாரங்கர். அவ்வளவுதான்... அது பாணரின் தலையில் பட்டு ரத்தம் கொட்டியது. இதைக் கவனிக்காமல் கோயிலுக்கு நேரம் ஆகிவிட்டது என்று அரங்கன் சந்நிதிக்கு அவசரமாய் சென்றுவிட்டார் சாரங்கர்.

சந்நிதிக்குச் சென்ற சாரங்கருக்கு அதிர்ச்சி. காரணம், அரங்கனின் முகத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

‘நீ ஒரு பாணர் மீது கல் எறிந்தாயே... அதன் விளைவுதான் இது. போ... அந்தப் பாணரை உன் தோளில் தூக்கி என் சந்நிதி அழைத்து வா...’ என்று ஆணையிட்டார் அரங்கன்.

உடனடியாக, லோக சாரங்கர் ஓடினார். காவிரிக் கரைக்குப் போய் பக்தியோடு இசைத்துக்கொண்டிருந்த பாணரை, ‘வா உம்மை அரங்கன் அழைத்தார்’ என்று தோளில் தூக்கி வைத்து அரங்கனிடம் விரைந்தார்.

ஆம்... எந்தப் பாணரை இழிகுலம் என்று ஒதுக்கி ஆலயத்துக்குள்ளேயே வரக் கூடாது என்று தடுத்தார்களோ... அந்தப் பாணரின் இசையைத்தான் தினம் தினம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான் அரங்கன்.

என்னைப் பார்க்கக் கூடாதென்றா உன்னை தடுத்தார்கள்? இதோ... நான் உனக்கென தரிசனம் தருகிறேன் பாணரே.. என்று அரங்கன் தன் விஸ்வரூபத்தை பாணருக்கு காட்டினார். திருமாலின் அடி முதல் முடி வரை கண்ட பாணர்... அமலனாதிபிரான் என்ற பாசுரங்களைப் பாடி, அப்போதே அரங்கனோடு கலந்தார். அதனால், அவர் திருப்பாணாழ்வார் என்று அழைக்கப்பட்டார். திருமாலின் வடிவழகு பற்றி அவர் பாடிய அமலனாதிபிரான் பாசுரங்கள் புகழ் பெற்றன.

அன்று லோகசாரங்கர்... இன்று ரங்கராஜன்

இந்தச் சரித்திரம்தான் நாளை ஹைதராபாத்தில் புதுப்பிக்கப்படுகிறது. ஆம். உண்மையிலேயே கடவுளால் விரும்பப்படுகிறவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அந்த லோக சாரங்கரின் பாத்திரத்தை இப்போது ஏற்க இருக்கிறார் ரங்கராஜன். பாணருக்குப் பதிலாக இன்று ஆதித்யா என்ற ஒடுக்கப்பட்ட இனத்து பக்தரை தோளில் தூக்கி இறைவனின் சந்நிதிக்குச் செல்கிறார்.

மேலும், தலித்துகளுக்கு வேதத்தை முறைப்படி உபதேசித்து, அவர்களை வேத விற்பன்னர்களாகவும் கோயிலில் அர்ச்சகர்களாகவும் ஆக்குவேன் என்றும் தெரிவித்திருக்கிறார் ரங்கராஜன். இதுபற்றிய செய்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளேட்டில் நேற்று வெளிவந்தது. இதுபற்றி ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பலர் கொண்டாடி வருகிறார்கள். ரங்கராஜனுக்கு நன்றி சொல்லி வருகிறார்கள். நவீன ராமானுஜர் என்று அவரைப் போற்றி வருகிறார்கள்.

இதுபோன்ற நேர்மறையான சிந்தனைகளாலும் செயல்களாலும் இன்றைய இந்தியாவின் நாள்களில் இணக்கம் நிரம்பி வழியட்டும்!

ஆரா

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது