மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஏப் 2018

சத்யம் சொல்வதெல்லாம் சத்தியமா?

சத்யம் சொல்வதெல்லாம் சத்தியமா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 44

இராமானுஜம்

தமிழகத்தில் சினிமா வளர்ச்சிக்கு நடிகர்கள், கலைஞர்கள் பிரபலமடைவதற்கு ஏணியாகவும் படிக்கட்டுகளாகவும் இருந்த திரையரங்கங்கள் ஏராளம். தமிழ் சினிமாக்காரர்களின் விருப்பத்துக்குரிய திரையரங்குகளில் முதலிடத்தில் இருந்துவருவது சென்னை சத்யம் சினிமாஸ். இது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரமா, சாபமா என்றால் ‘கெளரவத்துக்கு கவரிங் நகை போட்ட கணக்கு’ என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

பிறகு ஏன் அந்தத் திரையரங்கில் படம் போடுகிறீர்கள் என்றால், எந்த தயாரிப்பாளரும் சத்யம் தியேட்டரில் தங்கள் படங்களை சமீப வருடங்களாகத் திரையிட விரும்புவதில்லை. படத்தின் நாயகன், இயக்குநர்கள் இதை ஒரு கௌரவமாக நினைக்கின்றனர். அதனால் தயாரிப்பாளர் சத்யம் தியேட்டருடன் போராட வேண்டியுள்ளது என்கிறார்.

சென்னை நகர மக்களின் விருப்பத்துக்குரிய தியேட்டர்களில் சத்யம் சினிமாஸ் முதலிடத்தில் இருப்பதற்கு அங்கிருக்கும் வசதியும், நிர்வாகமும்தான் காரணம் என்கிறார்கள் அங்கு படம் பார்ப்பவர்கள்.

சத்யம் சினிமாஸ் தியேட்டரில் ஒரு படத்தைத் திரையிட விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளர் ஒப்பந்தம் போடுவது, படம் தயாரிப்பதைக் காட்டிலும் கடினமான வேலை என்கின்றனர். அப்படியும் படத்துக்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்து திரையிட்டால் கிடைக்கும் வருவாய் மிகச் சொற்பமாகவே இருக்கும் என்கின்றனர்.

சென்னை நகரைப் பொறுத்தவரை அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், கார்த்தி போன்ற வியாபார முக்கியத்துவம் உள்ள நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே வியாபாரமாகிறது. மற்றவர்கள் நடித்த படங்களை தயாரிப்பாளர்களே ரிலீஸ் செய்ய வேண்டியுள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர்த்த திரையரங்குகளில் படங்களைத் திரையிட அட்வான்ஸ் அல்லது மினிமம் கேரண்டி அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்குப் பணம் கிடைக்கும். 55% முதல் 70% வரை வசூலான தொகையிலிருந்து விநியோகஸ்தருக்கு ஷேர் கிடைக்கும்.

விளம்பரத்துக்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளை அந்தந்த தியேட்டர் நிர்வாகமே ஒட்டிக்கொள்ளும். அதற்கான ஒட்டுக் கூலியும் குறைவு. இது போன்ற எந்த வசதியும் சென்னை நகரத்தில் விநியோகஸ்தர்களுக்கு இல்லை.

சென்னை நகரத்தில் படங்களை ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமையாகவே இருந்து வருகிறது. தியேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்து உறுதிபடுத்த தியேட்டர் மேனேஜர், அந்த தியேட்டருக்கு படங்களை கன்ஃபார்ம் செய்யக்கூடிய நபர் ஆகியோருக்குத் தனிப்பட்ட முறையில் கனமான கவர்கள் (கரன்சியுடன்) கொடுத்தால் மட்டுமே தியேட்டர் கிடைக்கும். இந்த வகையில் மட்டுமே ஒரு லட்சம் வரை செலவாகும். அப்படிக் கொடுத்தும் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் நான்கு காட்சிகள் திரையிட அனுமதி கிடைக்காது.

இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை சத்யம் தியேட்டரில் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த தியேட்டரில் கடைநிலை ஊழியராக வேலையில் சேர்ந்து தன் கடின உழைப்பால் சத்யம் சினிமாஸ் குரூப்பில் உள்ள அனைத்து தியேட்டர்களுக்கும் படங்களை ஒதுக்கீடு செய்யும் தலைமை பொறுப்பில் இருப்பவர் முனீர் கண்ணையா. தியேட்டர் உரிமையாளரைக்கூட எளிதில் சந்தித்துவிட முடியும். முனீர் கண்ணையாவை நேரில் சந்திப்பதோ, தொலைபேசியில் பேசுவதோ எளிதான செயல் இல்லை. அதே நேரம் படங்களுக்குக் கேளிக்கை வரி விலக்கு உத்தரவு தமிழக அரசிடம் வாங்க வேண்டும் என்றால் அவரே தயாரிப்பாளர் லைனுக்கு வருவார். அப்படியொரு அக்கறை இந்த விஷயத்தில் மட்டும் ஏற்படுவது ஏன் என்றால் முதலீடு இல்லாத வருமானம் இதில் கிடைக்கும் என்பதுதான்.

சென்னை நகர விநியோக உரிமையை சத்யம் சினிமாஸ் குரூப்புக்குக் கொடுத்துவிட்டால், தயாரிப்பாளருக்குச் சிரமம் இருக்காது. கூனிக்குறுகி முனீர் கண்ணையாவிடம் நிற்க வேண்டி இருக்காது. உன்னையெல்லாம் எவன் படம் எடுக்க சொன்னது என்ற ஏளனமான பேச்சு கேட்க வேண்டியது இருக்காது. தியேட்டருக்குள் ஒரு வாரத்துக்கு முன்பே படத்தின் போட்டோ கார்டு, ஸ்டாண்டிங் போஸ்டர் எல்லாம் பிரதான இடங்களில் வைக்கப்பட்டுவிடும். தினசரி மூன்று காட்சிகள் என்பது உறுதியாகிவிடும்.

சத்யம் சினிமாஸ் குரூப்புக்கு விநியோக உரிமை தர மறுத்த, கொடுக்காத படங்கள் மற்றும் சிறு படங்களுக்கு தியேட்டர் கேட்டுப் போகிறவர்கள் ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தோம் என்று புலம்ப வேண்டியதிருக்கும். அட்வான்ஸ் கொடுக்காமல் நம்முடைய படங்களைத் திரையிட்டுப் பிழைப்பு நடத்துகிற இது மாதிரி தியேட்டர்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவையா எனப் புலம்பல்கள் நீண்ட வருடங்களாக சினிமா அலுவலகங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சத்யம் தியேட்டரில் திரையிடும் படங்களுக்கு நான்கு காட்சிகளோ, அல்லது பெரிய திரையரங்குகளோ ஒதுக்க மாட்டார்கள். குறைவான இருக்கை கொண்ட தியேட்டரில் குறிப்பிட்ட காட்சிகள் ஒதுக்கப்படும். வசூலில் முதல் வாரம் 50%, இரண்டாவது வாரம் 40%, மூன்றாவது வாரம் 30% ஷேர் என ஒப்பந்தம் செய்வார் முனீர் கண்ணையா. படம் நன்றாக உள்ளது டிக்கெட் டிமாண்ட் இருக்கிறது என்றாலும் காட்சிகளை அதிகரிக்க மாட்டார்கள். மூன்றாவது வாரம் விநியோகஸ்தரை கேட்காமலே நான்கு காட்சிகள் ஒதுக்கப்படும். அரங்கு நிறைந்த காட்சிகளாக இருக்கும். ஆனால், தயாரிப்பாளருக்கு வருவாய் குறையத் தொடங்கும். காரணம் 30% மட்டுமே ஷேர் என்பதால் முதல் வாரம் வசூல் ஆன 3 லட்ச ரூபாயில் விநியோகஸ்தருக்கு 1,50,000 ஷேர் கிடைக்கும். மூன்றாவது வாரம் வசூல் ஆன 3 லட்சத்தில் விநியோகஸ்தருக்குக் கிடைப்பது 90,000 ரூபாய். இடைப்பட்ட இரு வாரங்களில் மின்சாரக் கட்டணம், திரையிடும் செலவினங்கள் அதிகரித்திருக்காது. வெற்றி பெற்ற படங்கள் அனைத்தும் மூன்றாவது வாரத்திற்குப் பின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு கல்லா கட்டியிருக்கும். வெற்றி படத்தின் விநியோகஸ்தர் வருவாய் அடிப்படையில் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாது. முரசு கொட்டும் மூன்றாவது வாரம் நாடு போற்றும் நான்காவது வாரம் எனக் கடன் வாங்கி விநியோகஸ்தர் நகர் முழுக்க போஸ்டர் ஒட்ட ஏற்பாடுகளைச் செய்வார்கள். தயாரிப்பாளர்களின் படங்களை அட்வான்ஸ் இல்லாமல் திரையிட்டு அந்தப் படங்கள் மூலம் கிடைக்கும் வசூலில் இன்று வரை நியாயமான ஷேர் கிடைக்க எந்தச் சங்கமும் முயற்சி எடுக்கவில்லை. தயாரிப்பாளரின் வருமானத்தை அட்டையாக உறிஞ்சிக்கொண்டிருக்கும் இந்தப் போக்கை தடுத்து ஒழிக்க வேண்டும் என்பதே தயாரிப்பாளர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

நாளை... சென்னை நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் மக்கள் வர முடியாத நேரத்தில், சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களைத் திரையிட்டு வீணாகி வந்த நேரத்தை கல்லா கட்டப் பயன்படுத்தும் சத்யம் சினிமாஸ்.....

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 15 ஏப் 2018