மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: காத்திருக்கும் பானிபூரிக் கடைகள்!

சிறப்புக் கட்டுரை: காத்திருக்கும் பானிபூரிக் கடைகள்!

தேவிபாரதி

தற்போது நான் வசித்துவரும் வெள்ளக்கோவில் திருப்பூர் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகராட்சிகளில் ஒன்று. நொய்யலுக்கும் அமராவதிக்கும் இடையே அமைந்துள்ள வறண்ட பகுதி. வெள்ளக்கோவிலின் முக்கிய அடையாளமே அதன் தண்ணீர்ப் பஞ்சம்தான். மற்றோர் அடையாளம் ஸ்பின்ங் மில்களும் ஆயில் மில்களும். திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வானம் பார்த்த பூமிகளைச் செம்மறியாடுகளுக்கு விட்டுவிட்டுப் பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்கிய பவர்லூம் பேக்டரிகள் இப்போது அருகிவிட்டன. அந்த இடத்தைத் திருப்பூரைப் பூர்வீகமாகக்கொண்டிருந்த பின்னலாடை நிறுவனங்கள் நிரப்பிக்கொண்டிருக்கின்றன. அவற்றையொட்டி ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில்கள், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக், தளவாடப் பொருள்கள் சார்ந்த வர்த்தகம், ஓட்டல் தொழில், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை, ஜவுளி, நகைக் கடைகள், பேக்கரிகள், மளிகைக் கடைகள், கைப்பேசி விற்பனை எனக் கட்டுக்கடங்காமல் பெருகிகொண்டிருக்கும் தொழில், வர்த்தகம் சார்ந்த வளர்ச்சி வெள்ளக்கோவிலின் அடையாளத்தை அடியோடு மாற்றியிருக்கிறது.

செல்போன் ரீசார்ஜ் கடைகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் கட்டுக்கடங்காத கூட்டம். மளிகைக் கடைகள் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களாகவும் டீக்கடைகள் பேக்கரிகளாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. இட்லி, தோசை, தக்காளி சாதம், தயிர் சாதம், பரோட்டா என எளிமையாகப் பசியாற்றிக்கொண்டிருந்த மக்கள் இப்போது நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், சில்லி சிக்கன், காடை ஆம்லெட் என வெளுத்து வாங்கிகொண்டிருக்கிறார்கள்.

குட்டிப் பூரியில் பச்சைத் தண்ணீர்

வெறும் இரண்டு நெடுஞ்சாலைகளை வழித்தடங்களாகக்கொண்ட வெள்ளக்கோவிலில் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்ட் புட் கடைகள், தெருவுக்கு நான்கு வண்டிக் கடைகள், மாலை நேரங்களில் பேல் பூரியும் பானிபூரியும் சக்கைபோடு போடுகின்றன. சின்னச் சின்னப் பூரிகளுக்குள் சின்னச் சின்னத் துளைகளை இட்டு அதில் கொஞ்சம் பூரிக்கிழங்கைத் திணித்து, பாத்திரமொன்றிலிருந்து கரும்பச்சை நிறத் திரவமொன்றை மொண்டு ஊற்றி வாடிக்கையாளர்களின் கைகளில் திணிக்கிறார்கள். அந்தப் பூரித்துண்டை அவசர அவசரமாக வாய்க்குள் திணித்து ருசியை அறியக்கூட அவகாசமளிக்காமல் விழுங்கிகொண்டு அடுத்த துண்டுக்குக் கை நீட்டுகிறார்கள். அவசரம், பதற்றம். ஒரு நொடி தாமதித்தாலும் பானி, பூரியை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.

அந்தக் கைகளில் பெரும்பாலானவை இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் உரியவை. சிறுவர் சிறுமிகளில் பலர் இந்தப் பானிபூரி பைத்தியங்களாகிக் கடைத்தெருக்களுக்குப் பெற்றோர்களை இழுத்துச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். குழந்தைகளோடு சேர்ந்து பானிபூரி சாப்பிடத் துணிந்த ஒரு கொங்கு வட்டாரப் பெண்மணிக்கு அந்த வேகம் கைகூடவில்லை. ராய்ரொட்டியும் பொரிகடலையும் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட அந்த நாக்குக்கு ருசிக்கவுமில்லை. “அடப் போ இதொரு தீனீன்னு போயி வாங்கித் தின்னுக்கிட்டு” எனப் பிள்ளைகளைச் சலித்துக்கொண்டு காசைத் தந்துவிட்டுப் போகிறார்கள். ஆனாலும் அவர்களுடைய குழந்தைகளால் இந்தப் பானிபூரியிலிருந்து விடுபட முடியவில்லை. அதைச் சாப்பிடுவது அவர்களுக்கு ஒரு சாகசம். ஓடும் பஸ்ஸில் தாவி ஏறுவதைப் போன்ற சாகசம்.

பானிபூரி சாப்பிடுபவர்களில் சரிபாதிப் பேர் வடமாநிலத்தவர்கள். எந்தப் பதற்றமுமில்லாமல் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் அனாயசமாக அதை வாயில் போட்டுக்கொள்ளும் அழகைப் பார்த்தால் அவர்கள் பிஞ்சிலிருந்தே அந்த சாசகத்துக்குப் பழகிகொண்டிருந்திருக்க வேண்டும் என யூகிக்க முடிந்தது. அந்த அழகை ரசிப்பதற்காகவே சில சமயங்களில் அந்தப் பானிபூரிக் கடைகளுக்கு அருகே நின்றுகொண்டிருப்பேன். கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு முன்னால் அந்த வடமாநில இளைஞர்களுக்காகத்தான் வெள்ளக்கோவிலுக்குப் பானிபூரிக் கடைகள் அறிமுகமாயின. பிறகு ஃபாஸ்ட் புட் கடைகள், பெயர் தெரியாத விதவிதமான சுவைகொண்ட பலகாரங்கள்...

பெர்முடாஸும் சீஸும்

வெள்ளக்கோவிலில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் விற்பனைக்குக் கிடைக்கும் சோப்பு, ஷாம்பூ, பேஸ்ட், அழகு சாதனப் பொருள்கள் ஆகியவை தமிழகத்தின் மற்ற பெருநகரங்களில் கிடைக்கும் அதே வகைப் பொருள்களின் தரத்துக்கு எந்த விதத்திலும் குறைந்தவையல்ல. வெள்ளக்கோவிலின் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றின் குளிர்சாதனப் பெட்டியில் cheese பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அதையெல்லாம் வாங்குவதற்கு நம் ஊரில் யாராவது இருக்கிறார்களா எனக் கேட்டேன். கிடைத்த அவகாசத்தில் அவர் சுருக்கமாகப் பதில் சொன்னார்.

இங்கிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாரிஸ் எனக் கல்வி, வேலை நிமித்தமாகச் சென்று திரும்பியவர்களில் பலர் மேற்கத்திய உணவு வகைகளை விரும்புகிறார்கள், சீஸும் பிரெட்டும் அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளாக மாறியிருக்கின்றன, வெள்ளக்கோவில் வாசிகளில் சிலர் சீரியல் ஃபுட் பிரியர்கள் என்றவர் வெளியே பெர்முடாஸ் உடுத்திக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலரைக் காட்டினார். நிறம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்ததைத் தவிர எல்லோருமே அமெரிக்க, ஐரோப்பிய இளைஞர்களின் சாயலில் தென்பட்டார்கள். ஏறக்குறைய எல்லோருமே மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார்கள். பார்வைக் குறைபாடா அமெரிக்க ஸ்டைலா என யூகிக்க முடியவில்லை.

வடமாநில இளைஞர்களின் கதை

ஆனால், இந்தப் பானிபூரி சாப்பிடும் சாகசக்கார வடமாநில இளைஞர்களின் கதை வேறுவிதமானது. இங்கிருக்கும் ஆயில் மில்களிலும் ஸ்பின்னிங் மில்களிலும் பின்னலாடைத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு போகிறது. நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டுக்கொண்டிருந்த இந்த இளைஞர்கள் தாம் வேலை செய்யும் தொழிற்சாலைகளிலேயே வசித்துக்கொண்டிருந்தார்கள். ஆயில் மில் முதலாளிகளும் ஸ்பின்னிங் முதலாளிகளும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து அங்கேயே தங்க வைத்துக்கொள்ள விரும்பினார்கள்.

ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்ட பத்துக்குப் பத்து அளவுள்ள இரண்டு மூன்று அறைகள் கொண்ட வரிசை. அநேகமாக கம்பெனியின் மதில் சுவரோரம் அமைக்கப்பட்ட அந்த அறைகள் ஆஸ்பெஸ்டாஸ் அல்லது தகர ஷீட்டுக்களாலான கூரைகளால் மூடப்பட்டிருக்கும். அறைக்கு ஆறு அல்லது ஏழு பேர் வரை தங்கிகொள்ள வேண்டும். பாத்ரூம், டாய்லெட் வசதிகள் எனத் தனியாக ஒன்றும் இருக்காது, வேலை நேரங்களில் பணியாளர்களின் தேவைக்காகக் கட்டப்பட்ட கழிப்பிடங்களுக்கு இரவில் பூட்டுப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொதுவெளிகளில் மலம் கழிக்கவும் தாம் வசிக்கும் அறைக்கு வெளியே ஏதாவதொரு வாளியில் தண்ணீரை மொண்டுவைத்துக் குளிக்கவும் பழகிக்கொண்டிருந்தவர்கள். உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தில் பாதி கொடுத்தால் போதும், சந்தோஷமாக வாங்கிகொள்வார்கள். உள்ளே கேன்டீன் வசதி உண்டு. அதற்கான தொகையை அவர்களுக்கு வழங்கும் அற்ப ஊதியத்திலிருந்து நிர்வாகம் பிடித்தம் செய்துகொள்ளும். தவிர தங்களுடைய வசிப்பிடங்களிலேயே சப்பாத்தி சுட்டுச் சாப்பிட்டுக்கொள்வதற்கு அவர்களுக்குத் தெரியும்.

அவர்களுக்கென்று பணி விதிகள் ஏதும் இருப்பதுபோல் தெரியவில்லை. சிறைச்சாலை போன்ற கம்பெனியின் காம்பவுன்ட் சுவர்களுக்கு வெளியே செல்ல வாய்ப்பு இல்லாததால் பொதுச் சமூகத்தோடு எந்தத் தொடர்பும் அவர்களுக்கு இருந்ததில்லை. வடமாநில இளைஞர்களைப் பற்றிய அவதூறுகள் வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தன. ஊரில் நடக்கும் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு, பாலியல் குற்றங்கள் எல்லாவற்றுக்கும் அவர்களே பொறுப்பாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பற்றிய அச்சம் பொதுச் சமூகத்தில் விதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வெளியுலகத் தொடர்பு இல்லாமல் தனிப்பட்டுக் கிடந்த அவர்களது நிலையைப் புரிந்துகொள்வதற்கோ ஏதாவது செய்வதற்கோ தொழிற்சங்கங்களோ, தொழிலாளர் நல அலுவலர்களோ, மனித உரிமைச் செயல்பாட்டார்களோ, சமூக அக்கறை கொண்டவர்களோ வாய்க்கவில்லை, அதற்கான அமைப்புக்களோ, செயல்பாட்டார்களோ இந்தச் சிறு நகரில் இல்லை. எவ்விதமான அரசியல் கட்சிளோடும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளோடும் அவர்களுக்குத் தொடர்பு இல்லை. கிடைத்த குறைந்த ஊதியத்தில் வயிறு கழுவத் தேவைப்பட்ட குறைந்தபட்சத் தொகை போக எஞ்சியதை பீகாரிலோ, உத்தரப் பிரதேசத்திலோ, சத்தீஸ்கரிலோ, ஜார்கண்ட்டிலோ ஏதாவதொரு கைவிடப்பட்ட ஊரில் வாழும் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பினார்கள். வீதிகளில் தயக்கத்தோடு நடமாடினார்கள். யாராவது ஏதாவது கேட்கும்போது புரிந்துகொள்ள முடியாமல் வெறுமனே தலையசைத்துவிட்டுப் போனார்கள்.

ஆனால் இந்த நான்காண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறது.

வடமாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வருகை தருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிகொண்டே போகிறது. அவர்களோடு இப்போது நிறைய பெண்களும் வருகிறார்கள். சகோதரிகளாகவோ, தாய்மார்களாகவோ, காதலிகளாகவோ, மனைவிகளாகவோ வெள்ளக்கோவிலுக்கு வந்து சேர்ந்திருக்கும் வடமாநிலப் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது பெருகிக்கொண்டு போகிறது. ஆயில் மில்களிலிலும் ஸ்பின்னிங் மில்களிலும் வேலைசெய்பவர்களில் பாதிப் பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என ஆகியிருக்கிறது.

பணிபுரியும் இடங்களில் அவர்கள் அத்தனை பேரும் தங்குவதற்கான இடவசதி இல்லை. இப்போது நகரின் மூலை முடுக்குகளில் மலிவான வாடகைகளில் ஏதாவதொரு ஓட்டு வீட்டைப் பிடித்து அதில் குடியேறியிருக்கிறார்கள். வாடகையை உயர்த்தி வாங்க முடியும் என்பதால் உள்ளூர்க்காரர்களால் அதிகம் சீந்தப்படாத பழைய, எவ்விதமான அடிப்படை வசதிகளுமற்ற தங்கள் பழைய ஓட்டு வீடுகளை அவர்களுக்கு ஒதுக்குவதற்கு வெள்ளக்கோவிலின் வீட்டு உரிமையாளர்கள் யாரும் தயங்குவதில்லை.

வடமாநிலத்தவர்களின் வாழ்க்கை

இங்கேயும் கூட்டு வாழ்க்கைதான். இப்போது அவர்களோடு குழந்தைகளும் வந்து சேரத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லோருமாகச் சேர்ந்து பிளாஸ்டிக் குடங்களைச் சுமந்துகொண்டு ஏதாவதொரு சாலையோரக் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்து சேர்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். திரும்பி வந்தவுடன் பரபரவென்று சமையல் செய்கிறார்கள். சுட்ட சப்பாத்தி, சப்ஜி, குருமா தவிர இப்போது அரிசிச் சோற்றுக்கும் பழகிகொண்டுவிட்டார்கள். அரிசி நம்ப முடியாத அளவுக்கு மலிவான விலையில் கிடைக்கிறது. கிலோ மூன்று ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரை... ரேஷன் அரிசி.

தமிழக அரசு அநேகமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதமொன்றுக்கு 16 முதல் 25 கிலோ வரை பொது விநியோகத் துறை மூலம் விலையில்லா அரிசி வழங்குகிறது. பாதிப் பேருக்கு மேல் அந்த அரிசியை உணவுக்குப் பயன்படுத்துவதில்லை. சிலர் கோழிகளுக்கும் பன்றிகளுக்கும் பண்ணை மீன்களுக்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் இரையாகப் போட்டுவிடுகிறார்கள். பலர் வந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். கிலோ நான்கு ரூபாயென்றால்கூட 16 கிலோவுக்கு 64 ரூபாய். அரசிடமிருந்து விலையில்லாமல் 64 ரூபாய் கிடைக்கிறது. அதை ஏன் விட வேண்டும்?

வடமாநிலத்தவர்கள் வந்த பிறகு அந்த அரிசிக்கு ஏக கிராக்கி. அவர்கள் அதை மூட்டை மூட்டையாக வாங்கிகொண்டு போகிறார்கள். வார இறுதி நாள்களில் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு விலையில்லா அரிசியை மலிவான விலையில் வாங்கிக்கொண்டு போகிறார்கள். மாலை ஆறு, ஆறரை மணிக்கு மேல் சந்தைகளுக்குப் போகிறார்கள். சந்தை கலையும் அந்த நேரத்தில் காய்கறிகள் பாதிக்கும் குறைவான விலையில் கிடைக்கும். கத்திரி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் என இவற்றில் எவை மலிவாக கிடைக்கின்றனவோ அவற்றைக் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிக் கட்டைப் பைகளில் நிரப்பிக்கொண்டு போகிறார்கள்.

அவர்களுக்கான சுடிதார்களும் சல்வார்களும் பேன்ட் சட்டைகளும் சந்தையிலேயே கிடைக்கின்றன. காய்கறிகளைப் போலவே மலிவான விலைகளில் கிடைக்கிறது. ஈரோட்டிலும் கரூரிலும் கூட அதேபோல் நம்ப முடியாத மலிவு. எப்படி எனத் தெரியவில்லை? அவை செப்பனிடப்பட்ட பழந்துணிகள் என்கிறார்கள். டேமேஜ் அயிட்டங்கள் என்கிறார்கள். அதுபற்றிய ஆராய்ச்சிகளுக்கு இங்கே எந்த அவசியமுமில்லை. மலிவாகக் கிடைக்கிறதென்றால் மலிவாகக் கிடைக்கிறது அவ்வளவுதான்.

இருப்பதில் ஒரு சொற்பத் தொகையை இவற்றுக்கெல்லாம் செலவழித்துவிட்டு மறுநாள் பஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள செல்போன் கடை ஒன்றுக்குப் போகிறார்கள். அங்கே ஏர்டெல் மணி மூலம் ஊருக்குப் பணம் அனுப்புகிறார்கள். பெறுநரின் வங்கிக் கணக்கு எண்ணையும் அனுப்ப வேண்டிய தொகையையும் கொடுத்தால் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சம்பந்தப்பட்டவர்களின் கணக்குக்குப் பணம் போய்ச் சேர்ந்துவிடும். அந்த செல்போன் கடைகளில் வேலை செய்யும் இளம்பெண்களுக்கு இந்தியோ, பீகாரியோ தெரியாது. தெரிந்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. பணத்துடன் வந்து நிற்கும் ஒரு வடமாநில இளைஞரிடம் அவர்களது அலைபேசி எண்ணைக் கேட்க வேண்டும். அனுப்புநரின் வங்கிக் கணக்கு எண்ணை அவர்களே துண்டுத்தாள்களில் எழுதி எடுத்து வந்திருப்பார்கள். கேட்க வேண்டிய ஒரே கேள்வி ‘கித்னா ரூபியா’ என்பதுதான், அதை அந்தப் பெண்கள் மிகச் சுலபமாகப் பேசத் தெரிந்திருக்கிறார்கள், கித்னா என்பதும் எத்தனை என்பதும் ஒரே விதமான உச்சரிப்புக் கொண்ட வார்த்தைகளாக இருப்பதுகூடக் காரணமாக இருக்கலாம். அந்தக் கேள்விக்கு அவர்களால் ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியும். தௌசண்ட், டூ தௌசண்ட், ஃபைவ் ஹண்ட்ரட், ஆயிரம் ரூபாய்க்கு இருபது ரூபாய் சர்வீஸ் சார்ஜ்.

வங்கிக் கணக்கோ ஆதார் அடடையோ இல்லாமல் அஞ்சலகத்தின் துணையின்றி ஊருக்குப் பணம் அனுப்பிவிட முடியும். அந்தத் தொகையை எதிர்பார்த்து ஆயிரம் இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அவர்களது ஊரில் அம்மாவோ, அப்பாவோ, சகோதரிகளோ, மனைவியோ, குழந்தைகளோ விழி வைத்துக் காத்திருக்கிறார்கள்.

மீதமிருக்கும் சொற்பத் தொகையில் பானிபூரியும் மக்காச் சோளக் கருதும் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் கூடுகளுக்குள் போய் முடங்கிகொள்கிறார்கள்.

ஒரு தினுசில் அகதிகளைப் போல் தோற்றமளிக்கிறார்கள் இந்த வடமாநில இளைஞர்கள். அவர்கள் தம்முடன் அழைத்து வரும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பதற்றம் அவர்களது முகங்களில் அழிக்க முடியாத கோடுகளாகப் படிந்திருக்கிறது. கவலை தோய்ந்த அந்த முகங்களில் இருத்தல் பற்றிய பதற்றம் கானலின் அலைகளைப் போல மிதந்துகொண்டிருக்கின்றன.

ஊரில் அவர்கள் மீது நிரந்தரமாக ஒரு விரோத மனோபாவம் குடிகொண்டிருக்கிறது. ஓட்டல் சிப்பந்திகளும் டீக்கடைக்காரர்களும் அவர்களைக் கேலி செய்கிறார்கள். சில சமயங்களில் வசைபாடுகிறார்கள், அவமானப்படுத்தவும் முற்படுகிறார்கள். வெளிறிய நிறம் கொண்ட அந்தப் பெண்கள் உள்ளூர் ஆண்களை எதிர்கொள்ள நேரிடும்போது தலையைக் குனிந்துகொள்கிறார்கள். மீறி யாருடைய பார்வையாவது தங்களைத் துளைக்க முற்படும்போது அவர்களது கண்களில் அச்சம் படர்கிறது.

பணிபுரியும் இடங்களில் அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? அவர்களுக்கு எத்தனை மணி நேர வேலை? எவ்வளவு ஊதியம்? ஆயிரம் மைல்களைக் கடந்து இங்கே வந்து அரைவயிறும் கால்வயிறும் சாப்பிட்டுக்கொண்டு தங்கள் உழைப்பின் மூலம் இங்கே உள்ள ஆயில் மில்களுக்கும் ஸ்பின்னிங் மில்களுக்கும் பின்னலாடைத் தொழிற்சாலைகளுக்கும் லாபமீட்டித் தரும் அவர்களுக்கு ஏதாவது பணிப் பாதுகாப்பு உண்டா? இங்கே நடப்பிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள், பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள், குழந்தை உரிமை ஆகியவை அவர்களைப் பொருட்படுத்துகின்றனவா? கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் துறைகள் அவர்களைத் தமது வளாகங்களுக்குள் அனுமதிக்குமா?

தெரியாது.

அவை பற்றி அறிந்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. இதெற்கென இயங்கிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள்கூட அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் மீது அனுதாபம்கொள்ள யாரும் மெனக்கெடுவதில்லை. அதற்கு நேரமும் இல்லை.

யாரும் அழைக்காமல் அவர்கள் வருகிறார்கள்.

யாருடைய உதவியுமில்லாமல் இங்கே வசிக்கிறார்கள்.

பிறகு காணாமல் போய்விடுகிறார்கள்,

அவர்களுக்காக இங்கே பானிபூரிக் கடைகள் காத்திருக்கின்றன.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என்.கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: [email protected]

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon