மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 30 மே 2020

ரஜினி ரஞ்சித்தை பயன்படுத்துகிறாரா?

ரஜினி ரஞ்சித்தை பயன்படுத்துகிறாரா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 68

இராமானுஜம்

இந்தியாவில் அவசர நிலைச் சட்டம் அமலில் இருந்த போது அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டம் திறந்தவெளியில் நடத்த அனுமதி கிடையாது. அரங்குக்குள் நடத்தினால் காவல்துறை கண்காணிப்பு, கட்டிட உரிமையாளருக்கு இடையூறு, மிரட்டல்கள் வரும். இவற்றை தவிர்த்து தகவல்களை தொண்டர்களிடம் கொண்டு செல்ல திருமண நிகழ்ச்சிகளை திமுக தலைவர் கருணாநிதி மேடையாக பயன்படுத்தினார். அதே பாணியை கடந்த 20 வருடங்களாக கடைப்பிடிக்கும் ரஜினிகாந்த், அரசியல் சர்ச்சைகளை சினிமா விழாக்களில் பேசி தான் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி, கல்லா கட்ட வழி வகுப்பது அவர் பாணி.

தலித் மக்களின் வளர்ச்சி, உரிமைகளை பற்றி பேசக்கூடிய படங்களை மட்டும் இயக்க கூடியவராக தன்னை அடையாளப்படுத்தி வரும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள "காலா" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 9) நடைபெற்றது.

கர்நாடகா தேர்தல் முடிவுகளை கணக்கில் கொண்டு காலா படத்தின் ரிலீஸ் தேதி தீர்மானிக்கப்பட்ட சூழலில், காலா படத்திற்கான இசை வெளியீட்டுக்கு திறந்த வெளி அரங்கை தேர்வு செய்தது, இசை வெளியீட்டுக்கு மறுநாள் காலை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, இவை எல்லாம் ஒரு வகையான அரசியல் நோக்கம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ரஜினிகாந்த் பேசுகிறபோது இங்கு அரசியல் இல்லை, படத்தில் கொஞ்சம் அரசியல் இருக்கு ஆனால் அரசியல் படம் இல்லை என எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்தினார். ரஞ்சித், ரஜினி கருத்துக்கு என்ன பதில் கூற போகிறாரோ?

முதன்முறையாக திறந்த வெளியில் ரசிகர்களை சந்திக்கவிருப்பதால் மைதானத்தை நிரப்ப ஏற்பாடு செய்வதற்கு மாவட்ட செயலாளார்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மறுநாள் காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் இசைவெளியீட்டு விழா மேடையில் கட்சி அறிவிப்பு இருக்கும் என ஆர்வத்துடன் தங்கள் செல்வாக்கை காட்ட தொண்டர்களை அழைத்து வந்திருந்தனர்.

சுமார் 20,000ஆம் பேர் கூடியிருந்த YMCA வளாகத்தில் திறந்த வெளி மேடை ஏறிய ரஜினிகாந்த் காலா படத்தை புரமோட் செய்யும் வேலையை மிக கச்சிதமாக செய்தார். அவர் பேசிய அனைத்து விஷயங்களிலும் மையப் பொருளாக காலா இருக்கும் வகையில் கவனம் செலுத்தினார். இதுவரை தன் திரையுலக வாழ்க்கையில் தான் இணைந்து நடித்த வில்லன்களில் ரகுவரன், ரம்யா கிருஷ்ணன் எனக் குறிப்பிட்டு அதையும் தாண்டி, "காலா" வில்லன் என எதிர்பார்ப்பை எகிறச் செய்தார்.

நேற்று காலையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக ஆட்சித் தலைமை வெற்றிடத்தை நிரப்ப ரஜினிகாந்த் பொருத்தமானவர் என யானை வெடி ஒன்றை கொளுத்திப் போட அரசியல் கவனம் பெற்ற காலா ஆடியோ விழாவை தனக்கான பிரச்சார மேடையாக்கி லாவகமாக நடிப்பாற்றலுடன் பேசியது கண்டு அரசியல் விமர்சகர்கள் அதிர்ந்து போனார்கள்.

இருபது வருடங்களுக்கு முன் இடதுசாரி கொள்கை பேசிய சிவப்பு மல்லி, சாதிக் கொரு நீதி போன்ற படங்கள் வெற்றி பெற்றன. இன்று மக்கள் பெரும் கஷ்டத்திலும், அடிப்படை உரிமைகளுக்காகவும் தன் எழுச்சியாக போராடி வரும் சூழலில் அது மாதிரியான படங்கள் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு உள்ளதை பயன்படுத்திக் கொள்வதன் வெளிப்பாடு தான் காலா படம். தனது கருத்தை பொது வெளியில் கொண்டு செல்ல ரஜினியை ரஞ்சித் பயன்படுத்துகிறார் என சினிமா வட்டாரங்களில் புலம்பல்கள் கேட்கும். ஆனால் ரஜினிதான் ரஞ்சித்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

புத்திசாலிகளுடன் பழகலாம் அதிபுத்திசாலிகளிடம் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த புத்திசாலி இயக்குநர் ரஞ்சித் அவர் கதை சொன்ன விதம் என்னை கவர்ந்தது என காலாவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் ரஜினி.

சினிமாவில் பணம் சம்பாதிக்க ஆண்டவன் உத்தரவு தேவையில்லை அரசியலில் சேவை செய்ய ஆண்டவன் அனுமதி வேண்டும் என்கிறார் ரஜினிகாந்த்.

இயற்கையை அதன் போக்கில் இயங்கவிடாமல் தடுத்ததன் விளைவை மழைக் காலங்களில் தமிழகம் அனுபவித்து வருகிறது, தண்ணீர் இருக்குமிடத்தில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டியதை கொடு என்று கேட்க மாட்டார், ஆனால் போகாத ஊருக்கு வழி தேடுவது போன்று தென்னக நதிகளை இணைப்பதே தனது லட்சியம் என்கிறார்.

சினிமாவில் கடுமையான சண்டை காட்சிகள், ஓட்டம் ஆகியவற்றில் நாயகன் டூப்புகள் கஷ்டப்படுவார்கள் இறுதியில் கதாநாயகன் முகம் காட்டி கை தட்டல் வாங்கிக்கொள்வார். அது போன்று எந்த பொதுப் பிரச்சினைக்கும் வீதியில் இறங்கி போராட மாட்டோம், தமிழகத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் கருத்து சொல்ல மாட்டேன் ஆனால் தேர்தல் வரும் போது ஆண்டவன் சொல்லிட்டான் எனக் கூறி அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியை கைப்பற்ற முயலும் கதாநாயகன் ரஜினிகாந்த் முயற்சி பலிக்குமா என நம்மால் கூற முடியாது. ஆனால் பாபா படத்தில் லதா ரஜினிகாந்திடம் இவர் கற்றதும் பெற்றதும் - பறிகொடுத்ததும் என்ன?

நாளை மதியம் 1 மணி பதிப்பில்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67

வியாழன், 10 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon