மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 10 மே 2018

விண்ணப்பக் கட்டணம் டிடியாக ஏற்க முடியாது!

விண்ணப்பக் கட்டணம் டிடியாக ஏற்க முடியாது!

பொறியியல் கலந்தாய்வின் விண்ணப்பக் கட்டணம் வரைவோலை மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் கட்டணத்தை வரைவோலையாக ஏற்க முடியாது என்று மதியம் தாக்கல் செய்த மனுவில் அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கையில் இணையதளம் அல்லாத ஆஃப்லைன் மூலமும் கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மே 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்த மனுவுக்கு தமிழக அரசும், அண்ணா பல்கலையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நேற்று (மே 9) அண்ணா பல்கலைக்கழகம் பதில் அளித்தது. அப்போது ஆன்லைன் கலந்தாய்வு முறையில் வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்கள் என்ன செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பி அதற்கு இன்று பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பொறியியல் படிப்புகளின் விண்ணப்பக் கட்டணம் வரைவோலை மூலமாகவும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் போதுமான ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டது.

வரைவோலை பெறுவது மட்டுமல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பம் பூர்த்தி செய்யவும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பத்தைத் தமிழில் பூர்த்தி செய்வது என்பது முடியாத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் தனது நிலைப்பாட்டை இன்று மாலைக்குள் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மாலை, அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் வரைவோலை முறையை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதால் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக மட்டுமே பணம் செலுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

இதை விசாரித்த நீதிபதிகள், டிடி முறையை செயல்படுத்த முடியவில்லை என்றால் ஆன்லைன் கலத்தாய்வுக்கு ஏதேனும் ஒரு வங்கியை அழைத்து அவர்களின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். கிரெடிட் கார்டு இல்லாத மாணவர்கள் அந்த வங்கிக்கு நேரடியாக பணம் செலுத்துவது குறித்து நாளை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்

வியாழன், 10 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon