மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 14 அக் 2019

அயர்லாந்து கனவில் குறுக்கிடும் மழை!

அயர்லாந்து கனவில் குறுக்கிடும் மழை!

பாகிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் நேற்று (மே 11) கைவிடப்பட்டது.

டெஸ்ட் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு அணியின் கனவாகும். ஐசிசி அந்தஸ்து பெற்று கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதன் முறையாக அதிகாரபூர்வ டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை அயர்லாந்து எதிர்கொள்ளவிருந்தது. அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறவிருந்த இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம், மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது.

கடந்து வந்த பாதை:

1993ஆம் ஆண்டு அயர்லாந்து அணி முதல்முறையாக ஐசிசி கோப்பைக்குத் தகுதி பெற்றது. இதற்கு அடுத்த வருடம் ஸ்காட்லாந்து ஐசிசி கோப்பைக்குத் தேர்வாகிறது. அதன் பிறகு 1999ஆம் உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி ஸ்காட்லாந்து தகுதி பெற்றது.

இதனையடுத்து 2007ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்து அணி பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அப்போதுதான் உலகப் பார்வை அயர்லாந்து அணியின் மீது வந்து விழுந்தது.

பின்னர் இந்தியாவில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தியதை யாராலும் எளிதில் மறக்க முடியாது.

2017ஆம் ஆண்டு அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. கடைசியாக 2000ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்திருந்தது.

அயர்லாந்து அணி முன்பே பாகிஸ்தானுடனான டெஸ்ட் போடியில் விளையாடியுள்ளது. 2000ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் அயர்லாந்து பெண்கள் அணியும் பாகிஸ்தான் பெண்கள் அணியும் மோதின. இந்தப் போட்டியில் அயர்லாந்து பெண்கள் அணி, இன்னிங்க்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது அதிகாரபூர்வமாக தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கும் அயர்லாந்து, இதிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா, அல்லது 2007 உலகக் கோப்பையில் அயர்லாந்துடன் அடைந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் இந்தப் போட்டியில் பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சனி, 12 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon