மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

சிறப்புப் பார்வை: ஃபிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தம்; பல கோடிகளில் லாபம்!

சிறப்புப் பார்வை: ஃபிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தம்; பல கோடிகளில் லாபம்!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தை சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இருவரும் தொடங்கினர். இதற்கு முன்பு இருவரும் பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் பணியாற்றியவர்கள். இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் இப்போது முதன்மை நிறுவனமாக ஃபிளிப்கார்ட் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர்களாகும்.

இப்போது ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 விழுக்காடு பங்குகளை 16 பில்லியன் டாலருக்குப் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் வாங்கியுள்ளது. சில நாள்களாகவே இதுகுறித்து பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மே 9ஆம் தேதிதான் வெளியானது. இந்த ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் சில செய்திகளை இங்குக் காண்போம்.

உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் 1962ஆம் ஆண்டில் சாம் வால்டன் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் பெண்டோவைலில் உள்ள ஆர்கனாசஸ். இந்நிறுவனம் இந்தியச் சந்தையை தற்போது குறி வைத்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக ஊடுருவல் 2023ஆம் ஆண்டுக்குள் தற்போதைய நிலையில் இருந்து மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக மதிப்பு 200 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வு கூறுகிறது. தற்போது இதன் மதிப்பு 30 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஆகையால், இந்த ஆன்லைன் வர்த்தக சந்தையில் ஈடுபட வால்மார்ட் அதிக ஆர்வம்காட்டி முதலீடு செய்துள்ளது.

வெளியேறிய சச்சின் பன்சால்!

ஃபிளிப்கார்ட்டின் இரு நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தனது பங்கை முழுமையாக வால்மார்ட்டிடம் விற்றுள்ளார். பின்னி பன்சால் தனது பங்கின் ஒரு பகுதியை மட்டும் விற்றுள்ளார். இருவருக்கும் ஃபிளிப்கார்ட்டில் முறையே 5.5 மற்றும் 5 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளனர். இருவரும் தனது பங்கை முழுமையாக விற்றால் இவர்களுக்கு நிறுவனத்தின் இன்றைய மதிப்பீட்டின்படி 100 கோடி டாலர்கள் கிடைத்திருக்கும். இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சிறு முதலீட்டாளர்கள் சுமார் 30 வரை தங்களது பங்குகளை வால்மார்ட்டிடம் விற்றுள்ளனர். இணைப்பு குறித்த செய்திகள் வெளியானதும் இவர்கள் இந்நிறுவனத்தில் தொடர விரும்பாமல் வெளியேறி இருக்கலாம் அல்லது சிறந்த லாபம் கிடைக்கும் என்பதற்காக அனைவரும் விற்றிருக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த சிறு முதலீட்டாளர்கள் அனைவரும் 20 மில்லியன் டாலர் முதல் 200 மில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்திருந்தனர்.

பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் தங்களது பங்கை விற்றுள்ளன. குறிப்பாக டைகர் குளோபல், அக்செல் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பங்குகளை 120 கோடி டாலர் முதல் 400 கோடி டாலர் வரையில் விற்றுள்ளன. அதிகபட்சமாக சாஃப்ட்பேங்க் தனது 20.8 விழுக்காடு பங்கையும் விற்றுவிட்டது. 250 கோடி டாலர் முதலீடு செய்திருந்த ஜப்பானின் மசயோசி சன் நிறுவனம் 400 கோடி டாலருக்குத் தனது பங்குகளை விற்றுள்ளது. இதனால் இவருடைய நிறுவனம் 60 விழுக்காடு லாபத்தைக் கண்டுள்ளது. அக்செல் பார்ட்னர்ஸ் நிறுவனம் 2009ஆம் ஆண்டில் வெறும் மில்லியன் டாலர்களை மட்டும்தான் முதலீடு செய்தது. அவ்வப்போது முதலீட்டுத் தொகையை அதிகரித்து 300 டாலர்களாக உயர்த்தியது. இப்போது இந்நிறுவனம் தனது மொத்த முதலீட்டுத் தொகையுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு கூடுதலான தொகைக்கு விற்றுச் சிறப்பான லாபம் கண்டுள்ளது.

மகிழ்ச்சியில் நாஸ்பெர்ஸ்!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் 11 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவின் நாஸ்பெர்ஸ் நிறுவனம் தனது பங்குகளை முழுமையாக வால்மார்ட்டுக்கு விற்றுள்ளது. முதலீடு செய்த தொகையுடன் ஒப்பிடும்போது சிறப்பான தொகைக்குப் பங்குகளை விற்றுள்ளதால் இதன் நிறுவனர் வான் டிஜ்க் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் புளூம்பெர்க் குயின்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “மூலதனத் தொகையுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலைக்கு இப்போது விற்பனை செய்துள்ளோம். இது எங்களுடைய சிறந்த முதலீடுகளில் ஒன்று” என்று கூறியுள்ளார். இந்நிறுவனம் தனது 11 விழுக்காடு பங்குகளை 1.6 பில்லியன் டாலருக்கு விற்றுள்ளது.

இந்தச் சிறப்பான விற்பனையால் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பத்திரிகைகள், கேப் டவுனைச் சேர்ந்த நாஸ்பெர்ஸ் நிறுவனத்துக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று புகழ்ந்துள்ளன. மேலும் இவர் கூறுகையில், “நாங்கள் ஃபிளிப்கார்ட்டில் நிதி முதலீடு மட்டும்தான் செய்திருந்தோம். அதற்காக நாங்கள் நிதி முதலீட்டாளர்கள் அல்ல. மூலோபாய முதலீட்டாளர்” என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்நிறுவனம் இந்தியாவில் ஃபிளிப்கார்ட் மட்டுமின்றி, ஆன்லைன் விளம்பர நிறுவனமான ஓ.எல்.எக்ஸ், உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, பயண நிறுவனமான மேக் மை டிரிப் மற்றும் மேலும் சில நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளது.

மைந்தராவையும் வாங்கிய வால்மார்ட்

ஃபிளிப்கார்ட் - வால்மார்ட் விற்பனை ஒப்பந்தத்தில் ஃபிளிப்கார்ட்டின் ஓர் அங்கமான மைந்தராவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆடைகள் விற்பனை தளமான மைந்த்ராவை 2014ஆம் ஆண்டில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் 33 கோடி டாலருக்கு வாங்கியது. தற்போது 210 கோடி டாலருக்கு மைந்தராவை வால்மார்ட் வாங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டில் மைந்தரா தடுமாறியபோது சில மாதங்கள் கழித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனந்த் நாராயணன் நியமிக்கப்பட்டார். இவர் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். இதற்குப் பிறகு மைந்தரா மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது. 2016ஆம் ஆண்டில் ஜேபாங் நிறுவனம் 7 கோடி டாலரை மைந்தராவில் முதலீடு செய்தது. கடந்த நிதியாண்டில் மைந்தரா-ஜேபாங் நிறுவனத்தின் மொத்த வர்த்தக மதிப்பு 120 கோடி டாலராக உயர்ந்தது. தற்போதைய நிலையில் ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஃபேஷன் பொருள்கள் விற்பனையில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான சந்தைப் பங்குடன் ஃபிளிப்கார்ட் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால்தான் மைந்தராவையும் சேர்த்து வால்மார்ட் வாங்கியுள்ளது.

அமேசானின் முயற்சி தோல்வி!

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை முன்னதாக 5.5 பில்லியன் டாலர்கள் வரையிலான முதலீட்டில் வாங்க அமேசான் முயற்சி செய்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது வால்மார்ட் 16 பில்லியன் டாலருக்கு ஃபிளிப்கார்ட்டின் பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஃபிளிப்கார்ட்டின் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயருவதற்குக் காரணமாக இருந்தவர்களுள் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி முக்கியமானவர். இவர் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். சந்தைப் போட்டிகளுக்கு ஏற்றவாறு விற்பனை இலக்குகள், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், பண்டிகைக்கால சிறப்பு விற்பனைகள் ஆகியவற்றுக்கு இவர் துணிச்சலான முடிவுகளை எடுத்து செயல்படுத்திக் காட்டியுள்ளார். இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது.

தொடக்கத்தில் சரியும்!

அதிரடியாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றியிருந்தாலும், இந்நிறுவனம் கைப்பற்றப்பட்ட பிறகு மீண்டும் லாபகரமாக இயங்கச் சில காலம் ஆகுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. தனது முதலீட்டாளர்களிடமும் வால்மார்ட் நிறுவனம் ஜனவரி 2019 முதல் 2020 வரையிலான நிதியாண்டு கடினமானதாகவே இருக்குமென்று கூறியுள்ளது. மேலும், 2019ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் பங்கு ஆதாயங்கள் எதிர்மறை தாக்கத்தைத்தான் சந்திக்கக்கூடும் என்று வால்மார்ட் எதிர்பார்க்கிறது. அதாவது 2019ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் பங்கு ஆதாயங்கள் பங்கு ஒன்றுக்கு 0.30 டாலரிலிருந்து 0.25 டாலராகச் சரியக்கூடும். ஆனால், 2020ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் பங்கு ஆதாயங்கள் பங்கு ஒன்றுக்கு 0.60 டாலர்கள் வரை அதிகரித்து வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று மதிப்பிட்டுள்ளது.

வால்மார்ட் நிறுவனத்தின் இத்தகைய கணிப்புகளால் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் இழப்பு ஏற்படும் என்று ஃப்ளூம்பெர்க் குயின்ட் ஆய்வறிக்கை கூறுகிறது. 'வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டில் 77 விழுக்காடு பங்குகளை 16 பில்லியன் டாலர் முதலீட்டில் வாங்கியுள்ளதால் பங்கு ஆதாயங்களில் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளது. இதனால் ஃபிளிப்கார்ட் நிறுவனமும் இழப்பைச் சந்திக்கக்கூடும். ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு 2018-19ஆம் நிதியாண்டில் 10,800 கோடி ரூபாயும், 2019-20ஆம் நிதியாண்டில் ரூ.11,600 கோடியும் இழப்பு ஏற்படலாம்' என்று கூறியுள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் சந்தை ஆதிக்கம்!

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியோடு முடிவடைந்த 2017-18 நிதியாண்டில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வணிக மதிப்பு 7.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் இந்தத் தளத்தின் வழியாகப் பொருள்களை விற்றுள்ளனர். பல லட்சக்கணக்கானவர்கள் பொருள்களை வாங்கியுள்ளனர். அதனால்தான் இந்த வர்த்தகம் சாத்தியமாகியுள்ளது. இந்த வருடத்தில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 4.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு இந்தியாவில் உள்ள சந்தை மதிப்பைக் கருத்தில்கொண்டு வால்மார்ட் இந்தியா நிறுவனமும், ஃபிளிப்கார்ட்டும் தனித்தனி பிராண்டுகளாகவே இனியும் தொடரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொகுப்பு: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon