மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

லதா மங்கேஷ்கருக்கு ஸ்வர மவுலி விருது!

லதா மங்கேஷ்கருக்கு ஸ்வர மவுலி விருது!

இந்தியத் திரைப்படங்களில் பல்லாயிரம் பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு ‘ஸ்வர மவுலி’ என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது.

லதா மங்கேஷ்கர் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளுள் ஒருவராவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில், அவரது கலை பணிகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு ஸ்வர மவுலி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சங்கராச்சாரியா வித்யநரசிம்ம பாரதி சுவாமிகள், லதா மங்கேஷ்கரிடம் வழங்கினார். அப்போது லதா மங்கேஷ்கரின் சகோதரிகள் ஆஷா போஷ்லே, உஷா மங்கேஷ்கர் மற்றும் சகோதரர் ஹிரிதய்நாத் மங்கேஷ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

விருது பெற்ற பிறகு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லதா மங்கேஷ்கர், “ஜகத்குரு சங்கரச்சாரியா அவர்கள் கோலாம்பூரில் வைத்து எனக்கு ஸ்வர பாரதி விருது வழங்கினார். அது எந்த ஆண்டு என்பதை நினைவுகூர முடியவில்லை. இப்போது எனக்கு இரண்டாவதாக ஸ்வர மவுலி விருது வழங்கப்பட்டுள்ளது. அதை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைத்து விருதுகளும் பெரியது தான். அனைத்து விருதுகளையும் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon