மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

அனைவரின் கவனமும் ஆளுநரை நோக்கி!

அனைவரின் கவனமும் ஆளுநரை நோக்கி!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி பாஜக அதிகத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. எனினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெறாத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மஜத கட்சியின் குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. எடியூரப்பா, குமாரசாமி ஆகிய இருவருமே ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளனர்.

ஆளுநர் வஜுபாய் வாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதே அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒரே தொகுதியில் ஏழு முறை வெற்றி

இந்தச் சூழ்நிலையில், யார் இந்த வஜுபாய் வாலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குஜராத்தின் ராஜ்கோட் தொகுதி ஒரு காலத்தின் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. பின்னர் 1985இல் இந்தத் தொகுதியை பாஜக கைப்பற்றியது. அதிலிருந்து இன்றுவரை அங்கு பாஜக தோல்வியைச் சந்தித்ததில்லை. கர்நாடகாவின் தற்போதைய ஆளுநராக உள்ள வஜுபாய் வாலா, 1984ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1998ஆம் ஆண்டுவரை ராஜ்கோட் கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர்ந்தார். 2002ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் அப்போதைய குஜராத் முதல்வர் வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான மோடிக்காக இந்தத் தொகுதியை வஜுபாய் வாலா விட்டுக்கொடுத்தார். மோடியும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மோடி மணிநகர் தொகுதியில் போட்டியிட்டார். வஜுபாய் வாலாவோ ராஜ்கோட் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற 2007, 2012ஆம் ஆண்டு தேர்தல்களிலும் வஜுபாய் வாலா ராஜ்கோட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ராஜ்கோட் தொகுதியிலிருந்து வஜுபாய் வாலா ஏழு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

பின்னர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததும் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கர்நாடகாவின் ஆளுநராக வஜுபாய் வாலா நியமிக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மரபுப்படி அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள கட்சியை ஆட்சியமைக்கும்படி அவர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா, மணிப்பூர் முன்னுதாரணங்கள்

ஆனால், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும், அந்தக் கட்சியை ஆட்சியமைக்கும்படி அந்தந்த மாநில ஆளுநர்கள் அழைப்பு விடுக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றனர்.

தேர்தல் முடிவுகளின்படி ஆட்சியமைக்கப் போதுமான உறுப்பினர்களைப் பெறாதபோதும், அதிகத் தொகுதிகளில் வென்றதால் காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், கோவாவின் ஆளுநர் மிருதுளா சின்ஹாவைச் சந்தித்த பாஜகவின் மனோகர் பரிக்கர் தனக்கு மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததற்கான ஆதாரங்களை ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்சியமைக்க பாரிக்கருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து 2017ஆம் மார்ச் 14ஆம் தேதி கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்றார். பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 22 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாகவும், எதிராக 16 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் அவையை புறக்கணித்தார். இதனால், அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலிலும் இதே நிலைதான் ஏற்பட்டது. மணிப்பூரில் உள்ள 60 இடங்களில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 30 இடங்களைப் பிடிக்க, காங்கிரசுக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனாலும் இதர சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாஜக 33 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது.

இதையடுத்து மணிப்பூரின் முதல்வராக பாஜகவின் பிரேன் சிங் 2017ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி பதவியேற்றார். பின்னர் மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 32 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் முதல்வர் பிரேன் சிங் அரசு வெற்றிபெற்றது. 28 எம்எல்ஏக்கள் இருந்தபோதும் காங்கிரஸால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை ஆளுநர் மரபுப்படி முடிவெடுப்பாரா, அல்லது கோவா, மணிப்பூரில் நடைபெற்ற முறையைப் பின்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon