மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 மே 2018

ஆளுநருடன் குமாரசாமி, சித்தராமையா சந்திப்பு!

ஆளுநருடன் குமாரசாமி, சித்தராமையா சந்திப்பு!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்த மஜத தலைவர் குமாரசாமி, கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். சந்திப்பில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, குலாம் நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை (மே 15) தொடங்கியது. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கக்கூடிய அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பாஜகவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்தனர். ஆனால் ஆட்சியமைக்கக்கூடிய அளவுக்கு பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை.

இதையடுத்து திடீர் திருப்பமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. மேலும் மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி முதல்வராவதற்கும் ஆதரவு தெரிவித்தது. இதற்காகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள் ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். ஆனால் அவர்களைச் சந்திக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததையடுத்து ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டு குமாரசாமி எழுதிய கடிதத்தில், "மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்டுள்ளோம். எனவே ஆட்சியமைக்க உரிமை கோரித் தங்களைச் சந்திக்க மாலை 5.30-6.00 மணிக்குள் நேரம் ஒதுக்கித்தர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாலை 5.30மணியளவில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வஜூபாய் வாலாவை காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.

பின்னர் அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்தராமையா, "மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு, காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என ஆளுநரிடம் தெரிவித்தோம். எங்கள் தீர்மானக் கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்துள்ளோம். ஆட்சியமைக்க எங்களுக்கு உரிமை உள்ளது. குமாரசாமி தலைமையில்தான் ஆட்சி அமையவுள்ளது. ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறுகையில், "கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிக்கும் முடிவை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். முடிவெடுப்பது ஆளுநரின் கையில்தான் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அனுமதி

முன்னதாக சரியாக மாலை 4.30 மணியளவில் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் ஏழு நாட்கள் அவகாசமும் கோரினார். அவருடன் மத்திய அமைச்சர் ஆனந்த குமாரும் உடனிருந்தார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, " தனிப் பெரும்பான்மையான கட்சி என்பதால் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளோம். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் எங்களுக்கு அனுமதியளித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க காங்கிரஸ் முயற்சி

மஜதவுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியமைக்க முயலும் நிலையில், அது குறித்து விமர்சனம் செய்துள்ள எடியூரப்பா, "கர்நாடக மக்கள் காங்கிரஸ் ஆட்சியைப் புறக்கணித்துவிட்டனர். காங்கிரஸ் அரசுக்கு எதிரான மனநிலையே அதன் தோல்விக்கு காரணம். எங்களுக்குத்தான் மக்கள் முழு ஆதரவை அளித்துள்ளனர். மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் மீண்டும் ஒருமுறை பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் இதனை ஒருபோதும் கர்நாடக மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்குத் தலை வணங்குகிறேன். தேர்தலில் மஜத பெற்ற வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் வெறுப்பு வாக்குகளே. எனவே மஜதவினர் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது" என்றும் தெரிவித்துள்ளார். "தனிப் பெரும்பானமையான கட்சியான பாஜகவைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். உறுதியாக பாஜக ஆட்சியமைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

செவ்வாய் 15 மே 2018