மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

தற்கொலைக்குத் தூண்டினாரா தரூர்?

தற்கொலைக்குத் தூண்டினாரா தரூர்?

மனைவி சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி டெல்லி காவல் துறையினர் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மூன்றாவது மனைவியான சுனந்தா புஷ்கர், கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெகர் தராருடன் சசி தரூருக்குத் தொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பான தகராறில் சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் போலோனியம் என்ற நச்சுப்பொருளால் சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல் துறையினர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (மே 14) டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதி தர்மேந்தர் சிங் முன்னிலையில் டெல்லி காவல் துறையினர், சுனந்தா புஷ்கர் வழக்கில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அந்தக் குற்றப்பத்திரிகையில், சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்படவில்லை, தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் தனது மனைவி சுனந்தா புஷ்கரைக் கொடுமைப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் சசி தரூர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி காவல் துறையினர் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மீது மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் கொடுமைபடுத்துதல் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 மற்றும் 498A கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு சசி தரூர் முறையாக ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தாலும் எம்.பி பதவி வகிப்பதாலும் அவர் கைது செய்யப்படவில்லை என்று டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கானது வரும் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளைக் கடுமையாக எதிர்த்துள்ள சசி தரூர், “கடந்த அக்டோபரில் சட்ட அதிகாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் யாருக்கு எதிராகவும் இந்த வழக்கில் ஒன்றும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், ஆறு மாதங்களில் நான் தற்கொலைக்குத் தூண்டினேன் என்கிறார்கள். நம்ப முடியவில்லை” என்றும், “சுனந்தாவை நன்கு அறிந்த எவரும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நம்ப மாட்டார்கள். அப்படியிருந்தால் தானே அதற்கு நான் தூண்டுகோல் என்ற விவகாரம் எழும்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon