மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்!

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்!

பவளப் பாறைகள் (Coral Reefs). கடலின் பல்லுயிர் ஆதாரம் இந்த பவளப் பாறைகள். நேற்று இதே பகுதியில் சதுப்பு நிலம் பற்றிப் பார்த்தோம் அல்லவா? சதுப்பு நிலங்களைவிடப் பல மடங்கு ஆற்றல் கொண்டுள்ளவை பவளப் பாறைகள். பூமிக்கு மழைக்காடுகள் என்றால், கடலுக்குப் பவளப் பாறைகள். அப்படி ஓர் உயிர்ச் சூழலைத் தன்னகத்தே உருவாக்கி வைத்திருக்கும் வாழ்வியில் கிடங்குகள் அவை.

பல்வேறு வண்ணங்களில் செழித்திருந்த கடலின் இதயம், இன்று வெளுத்துப் போய் வெறும் எலும்புகளாகத் துருத்திக்கொண்டு நிற்கிறது. இதை Coral bleaching என்பர். இதற்கு முக்கியமான காரணம், உலகில் பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) அதிகமாகி விட்டதுதான். ஏனெனில், இந்த பசுங்குடில் வாயுக்களால் உருவாகும் வெப்பத்தைக் கடல்களும் பெருங்கடல்களும் உறிஞ்சத் தொடங்கிவிட்டன. இதனால் நீரின் வெப்பம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இத்தகைய வெப்பத்தில் பவளப் பாறைகளால் தாக்குப் பிடிக்க முடியாது.

பவளப் பாறைகள் சூழ்ந்த சுற்றத்தில் அவை 500 மேற்பட்ட மீன் இனங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. இனங்களின் எண்ணிக்கை மட்டும் 500 என்றால், ஒட்டுமொத்த மீன்களின் எண்ணிக்கையைக் கற்பனை செய்து பாருங்கள்! இவை பவளப் பாறைகளால்தான் வாழ்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இவை இல்லை என்றால் பவளப் பாறைகளால் வாழ முடியாது என்பதும் உண்மை. இதுதான் இயற்கையின் சாரம். பகிர்ந்து வாழ்தல் எனும் சூழலியல் பண்பு.

Extensive fishing எனும் வர்த்தக ரீதியான அதீத மீன் பிடிப்பால் பல்வேறு மீன் இனங்கள் அழிந்துவருகின்றன. அவற்றுடன் சேர்த்து பவளப் பாறைகளும் அழிந்துவருகின்றன.

இவ்வாறான அழிவிலிருந்து காப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளாவிட்டாலும், மேலும் அழிவுக்கு வழிவகுக்காமலாவது இருக்க வேண்டுமல்லவா? மன்னார் வளைகுடா பற்றி நீங்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள். அரிய வகை உயிரினங்களின் தாய்நிலம். இந்த உயிரினங்கள்தான் ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் வாழ்வாதாரம். இவர்களையும் இவர்கள் சார்ந்துள்ள மீன்வளத்தையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்க் கோளக் காப்பக அறக்கட்டளையை மூடுவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுவருவதாகச் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் காப்பகத்துக்கு என்று ஒரு சிறப்பு உண்டு. தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க் கோளக் காப்பகம் என்ற பெருமை கொண்டது. உலகப் புகழ்பெற்ற இக்காப்பகத்தைக் காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இவற்றைக் கைவிட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பது புவியில் வாழும் உயிர்களுக்குச் செய்யும் துரோகம்.

நரேஷ்

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon