பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில், கைது செய்யப்பட்ட முன்னாள் இணை ஆணையர் புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பழனி பால தண்டாயுதபாணி கோயிலில் 2004ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய உற்சவர் சிலை செய்ய முடிவு செய்யப்பட்டு, சிலை செய்து வைத்தனர். புதியதாகச் செய்யப்பட்ட உற்சவர் சிலை சில நாள்களிலேயே கறுத்துப்போனது. இதனால் கோயிலில் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல் தன்னந்தனியாக 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டது. இதைச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 25ஆம் தேதி சென்னையில் முத்தையா ஸ்தபதியையும், பழனி பால தண்டாயுதபாணி கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜா என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். கும்பகோணத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தச் சிலை மோசடி வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், 3ஆம் கட்ட விசாரணையை ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் கடந்த இரு நாள்களாக மேற்கொண்டு வந்தனர். இதில், சிலை வைக்கப்பட்ட நேரத்தில் பழனி கோயில் உதவி ஆணையராக இருந்தவரும், திருத்தணி கோயில் முன்னாள் இணை ஆணையருமான புகழேந்தி மற்றும் இந்து சமய அறநிலையைத் துறை நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் நேற்று (மே 14) அடைக்கப்பட்டனர்.