மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: மக்கள் இசையைப் பரவலாக்கும் கலைஞன் !

சிறப்புக் கட்டுரை: மக்கள் இசையைப் பரவலாக்கும் கலைஞன் !

கார்த்திக் ஜீவானந்தம்

இன்று (மே 15) இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாள்

“இருண்ட காலங்களில் பாடல்கள் ஒலிக்குமா?

ஒலிக்கும். அவை இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்.”

கவிஞர் பெர்டோல்ட் ப்ரெக்டின் புகழ்பெற்ற இந்த வாசகத்தை, என் நண்பர் ஒருவர் மிகக் கடுமையான நாள்களை எதிர்கொண்டிருந்தபோது எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

“நீ இல்லாவிட்டால் என்றோ இறந்திருப்பேன் என் ராசாவே” என்று இளையராஜாவின் இசையைக் குறித்து ஒருவர் எழுதியதை வாசிக்கும்போதும், மேற்குறிப்பிட்ட வாசகத்தைப் படிக்கும்போதும் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. கலை வெளிப்பாடு என்பது மனிதனின் மிகப் பெரும் உந்து சக்தி. கலை வெளிப்பாடான இசையும் அன்பைப் போல் நம்மை சூழ்ந்துகொண்டு நம் சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்கிறது. மீட்டெடுக்கிறது.

தமிழ்த் திரையிசையில் சந்தோஷ் நாராயணன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகான அலையின் மிக முக்கிய இசையமைப்பாளர்.

இத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தும் சந்தோஷ் ஏன் முக்கியமான இசையமைப்பாளர்?

கென்யாவின் சூழலியல் போராளியும், பெண் விடுதலைக்குப் பாடுபட்டவருமான வான்காரி மாத்தாய் தன் சுயசரிதையில் சொல்வதைப் போல், ஓர் இனத்தை அழிக்க அவ்வினத்தின் இசையை, இசைக் கருவிகளை அழிப்பது மிக நுணுக்கமான வியூகம்.

கென்யாவின் பழங்குடிகளை மதம் மாற்றி, அவர்களின் வளங்களைச் சுரண்ட ஐரோப்பியர்கள் தொடக்கத்தில் மேற்கொண்டது, அவர்களிடையே புழங்கிய ‘கிச்சாண்டி’ என்ற குடுவை போன்ற இசைக்கருவியைச் சிறுமைப்படுத்தி, புதிய ஐரோப்பிய கருவிகளை அறிமுகப்படுத்தியதுதான். எல்லாக் கிச்சாண்டிகளையும் அழித்த பின் ஒன்றிரண்டை மட்டும் ஐரோப்பிய அருங்காட்சியகத்தில் கொண்டு வைத்தனர். எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பழங்குடி மக்களுக்கு அந்தக் கருவி இசைக்கருவி மட்டுமல்ல; தங்கள் உணர்வை, அறிவை வெளிப்படுத்த அவர்கள் பாடிய பாடல்களுக்கு உயிர் கூட்டியவையும்கூட.

அதற்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் என்ன சம்பந்தம்?

2012ஆம் ஆண்டு பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டக்கத்தி திரைப்படத்தில்தான் சந்தோஷ் நாராயணன் அறிமுகமானார். அதில் இசையமைத்திருந்த அறுபது சதவிகிதப் பாடல்கள் கானா வகையைச் சேர்ந்தவை.

வடசென்னையில் கானா என்பது அம்மக்களின் வாழ்வோடு கலந்தது. அதுவரை தமிழ் திரையிசையில் பத்தோடு பதினொன்றாக இருந்த கானா வகைமை, பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்தது. ‘ஆடி போனா ஆவணி’ பாடல் முதன்முதலாக ஒலித்தபோது இளைஞர்கள் வெகுவாக ரசித்தார்கள். அந்தப் பாடல் ஒலிக்காத நகரப் பேருந்துகளே இல்லை எனலாம்.

அட்டக்கத்தியில்தான் பாடகர் கானா பாலாவை சந்தோஷ் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மெட்ராஸ், மேயாத மான் எனத் தன் படங்களில் கதைக்கேற்றாற்போல் கானாவைப் பயன்படுத்தினார்.

கானா பாடல்கள் சந்தோஷ் நாராயணனால்தான் வெற்றி பெற்றன என்று சொல்லவில்லை. ஆனால், அதுவரை இல்லாத அளவுக்கு கானா பெருவாரியான இளைஞர்களைச் சென்றடைந்ததற்கு சந்தோஷ் மிக முக்கியமான காரணி என்பதில் சந்தேகமில்லை.

திருச்சியில் பிறந்து வளர்ந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடித்த பின், சுயாதீன இசையமைப்பில் (Independent Music) ஆர்வத்துடன் இயங்கியதோடு நிறைய குறும்படங்களுக்கும் ஆல்பங்களுக்கும் இசையமைத்த அனுபவங்களோடு திரையிசையில் ஈடுபட்ட சந்தோஷ் நாராயணன் 2012க்குப் பிறகு தங்களின் முதல் படங்கள் மூலம் ஒரு பெரும் நம்பிக்கையை முன்னகர்த்திக்கொண்டுவந்த பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் என அனைவரின் படங்களிலும் இருந்தார். அவர்களின் அடுத்தடுத்த படங்களுக்கும் இந்தக் கூட்டணி தொடர்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையின் பல்வேறு தளங்களில் இயங்குவதோடு, பரிசோதனையும் செய்கிறார். தன் குரலை ஜிகர்தண்டாவில் "BaBy" என்கிற பாடலில் பயன்படுத்தியதையே பரிசோதனை எனலாம். பெரும்பாலான சோதனைகளில் அவருக்கு வெற்றியே. அந்த வெற்றிக்குப் பிறகு அவரது குரலை நிறைய இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினர்.

அதனால்தான் சந்தோஷால் ‘வானம் பார்த்தேன்’ என உருகவும், ‘உசுரு நரம்புல நீ’ என சோகம் இழையோடவும், ‘பாண்டி நாட்டுக் கொடியில் மேல’ என ஆட்டமிட வைக்கவும் முடிகிறது.

கடந்த ஐந்து வருடங்களில் சந்தோஷின் ஹிட் பாடல்கள் கொஞ்ச நஞ்சமில்லை என்றாலும் பின்னணி இசையில் அவர் தொட்ட தளங்கள் கவனிக்கப்படாதவை. முடிந்தால் பீட்சா படத்தின் ‘மோகத்திரை Prelude’ மற்றும் ‘ஒரு நாள் இரவு’ தீம் இசையையும் கேட்டுப்பாருங்கள்.

மெட்ராஸ் படத்தின் தனித்தனி BGM Track களில் ‘சுவர்’ முக்கியமானது என்றாலும் ‘கலையரசி’ என்கிற தீம் ஒரு புத்தம் புதிய புன்னகையைப் பூசிவிடும் வல்லமை வாய்ந்தது.

சில இசையமைப்பாளர் அமைதியே உருவாய் இருக்கிறார்கள்; அவர்களால் அப்படி இருக்க முடிகிறது என்பதே ஆச்சர்யமானது என்று சொன்னார் நண்பர் ஒருவர். சந்தோஷ் அப்படியானவரா என்பது தெரியவில்லை. அவர் பேட்டிகளில் தன்னை முன்னிறுத்தும் கேள்விகளுக்கும் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கல்லூரி மாணவனைப் போன்று சிறிது ரகளையும் சேர்ந்து, எளிமையாகவே பதில்கள் சொல்கிறார்.

தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை இசையமைப்பதில் செலவிடும் சந்தோஷ் நாராயணனிடம் ஒரு பழக்கம் என்னவென்றால், தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனையும் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் என்றும், அது பயங்கர நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார் என்றும் அவர் நண்பரும் பாடகருமான பிரதீப் கூறுகிறார்.

அடக்கத்தியில் ‘ஆசை ஒரு புல்வெளி’, குக்கூவில் ‘ஆகாசத்த’ , எனக்குள் ஒருவன் திரைப்படத்தில் ‘பூ அவிழும் பொழுது’ , மெட்ராஸில் ‘ஆகாயம் தீப்பிடிச்சா’, மனிதனில் ‘அவள்’, கபாலியில் ‘மாயநதி’, மேயாத மானில் ‘மேகமோ அவள்’ , காலாவில் ‘கண்ணம்மா’ என பிரதீப் உடன் சந்தோஷ் இணைந்த எல்லாப் பாடல்களும் உச்சம் தொட்டவை.

இருபது படங்களைக் கடந்துவிட்ட சந்தோஷ் நாராயணனின் சமீபத்திய ஆல்பமான ‘காலா’வின் இசை மற்றும் முந்தைய படமான மெர்க்குரியின் பின்னணி இசை இரண்டும் அவருடைய படைப்பாற்றலின் சமீபத்திய உதாரணங்கள். மெர்க்குரிக்கு முன் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ‘கருப்பி என் கருப்பி’ பாடலையும் படைப்பாற்றலுக்கு உதாரணமாய்க் கூறலாம். இது போன்ற சாயலில் தமிழில் பாடலே வந்ததில்லை எனலாம்.

விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தன் கலைச்செயல்பாட்டைத் தொடர்வதும் ஒரு கலைஞனுக்கு முக்கிய மாண்பு. சந்தோஷ் நாராயணனும் அதை நன்கறிவார்.

மே 15 ஆன இன்று, நம் தமிழ் சினிமாவின் பன்முக இசைக் கலைஞனுக்குப் பிறந்த நாள்!

பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ!

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon