மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சேகரைக் கைது செய்யாவிட்டால்...

சேகரைக் கைது செய்யாவிட்டால்...

“எஸ்.வி.சேகரை இன்றே கைது செய்யாவிட்டால் அனைத்துக் கட்சியினரையும் திரட்டி பெரும் போராட்டம் நடத்த நேரிடும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் ஊடகங்களில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி இழிவாக கருத்து பதிவிட்டிருந்தார். அதனையடுத்து காவல் துறையினர் எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம், ‘எஸ்.வி.சேகரைக் கைது செய்யாதது ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் எஸ்.வி.சேகர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தனிப்படைகள் அமைத்து எஸ்.வி.சேகரைத் தேடிவருவதாக தமிழகக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து நேற்று (மே 14) அறிக்கை வெளியிட்டுள்ள கி.வீரமணி, “சென்னை பெருநகரக் காவல் துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? ஒரே நேரத்தில் 62 ரவுடிகளைப் பிடித்துச் சாதனை படைத்த திறமைக்குச் சொந்தமானது சென்னை பெருநகரக் காவல் துறையும் அதன் சிறப்பான ஆணையரும். இத்தகு காவல் துறை எஸ்.வி.சேகர் விஷயத்தில் கைகட்டிக்கொண்டு இருப்பது ஏன்? யாருடைய கட்டளையால் இந்த நிலை? தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘நான் சென்னையில்தான் இருக்கிறேன். காவல் துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும்’ என்று எஸ்.வி.சேகர் சவால் விடுத்துள்ளதாகக் கூறியுள்ள கி.வீரமணி, “இந்த நிலை தமிழக அரசுக்கும், சென்னை பெருநகரக் காவல் துறைக்கும் பெருமை சேர்ப்பதாகாது. உடனே, சவால் விடும் எஸ்.வி.சேகரை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon