சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் தேவை 4.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறையின் ஓர் அங்கமான பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் தேவை அல்லது பயன்பாடு 17.67 மில்லியன் டன்னாக இருந்தது. இதில் பெட்ரோல் விற்பனை சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட 9.3 சதவிகித உயர்வுடன் 2.28 மில்லியன் டன்னாக இருந்தது. சமையல் எரிவாயு விற்பனை 13 சதவிகித உயர்வுடன் 1.87 மில்லியன் டன்னாகவும், நாப்தா எரிபொருள் விற்பனை 6.2 சதவிகித உயர்வுடன் 1.06 மில்லியன் டன்னாகவும் இருந்தது.
சாலை அமைப்புப் பணிகளில் பயன்படுத்தப்படும் பிடுமன் எரிபொருள் விற்பனையும் 16.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால், பெட்ரோலியம் கசடு எண்ணெய் விற்பனை 8.6 சதவிகிதம் சரிந்துள்ளது.’ சென்ற மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்த்தப்பட்டு வந்தபோதும் அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த மாதம் கர்நாடகத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 13 நாள்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் இந்த மாதத்துக்கான எரிபொருள் பயன்பாடு சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.