மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: வார்த்தைகளில் இன்னும் வாழும் மன்னராட்சி!

சிறப்புக் கட்டுரை: வார்த்தைகளில் இன்னும் வாழும் மன்னராட்சி!

ஜெ.வி.பிரவீன்குமார்

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்றன. அதையொட்டி வழக்கம்போலவே ஊடகங்களில், ‘முடிசூடப்போவது யார்?’, ‘மகுடம் தரிப்பது யார்?’, ‘அரியணை யாருக்கு?’, ‘சிம்மாசனத்தில் அமரப்போவது யார்?’ எனப் பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் கர்நாடகத் தேர்தலின்போது மட்டும் பொதுவெளிகளில் உச்சரிக்கப்படுகிற சொல்லாடல்கள் அல்ல. நாட்டில் எந்தப் பொதுத்தேர்தல் வந்தாலும் இவ்வகைச் சொல்லாடல்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் வழக்கமாகச் சொல்லப்படுகிற வெறும் வார்த்தைகள்தானே எனக் கடந்துபோய்விட முடியவில்லை. கடந்தும் போகக் கூடாது. காரணம், ‘முடியாட்சி’ எனப்படும் ‘மன்னராட்சி’ முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுதான் நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறை இருந்து வருகிறது. அதிலும், உலகளவில் மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. இப்படியிருக்க, ஒரு ஜனநாயகத் தேர்தலையொட்டியதான இவ்விவாதங்கள் மற்றும் உரையாடல்களில் ஒரு மன்னராட்சிக்கேயுரிய இவ்வகைச் சொல்லாடல்களை நாம் இன்னும் பயன்பாட்டில் வைத்திருப்பது எந்தளவுக்குச் சரியான அணுகுமுறையாக இருக்கும் எனத் தெரியவில்லை.

நினைவில் மறையாத மன்னராட்சி

“நினைவில் காடுள்ள மிருகம் எளிதில் அடங்குவதில்லை!” எனும், கவிஞர் சச்சிதானந்தன் எழுதிய புகழ்பெற்ற மலையாளக் கவிதையொன்று உள்ளது. அதாவது, நவீனமான மனித வாழ்க்கையில் பயணித்தாலும், நினைவுகளில் இன்னும் காடுகளைச் சுமந்திருப்பவன், தான் பார்க்கிற புறச் சூழல்களைக் காடுகளில் வாழ்ந்த அந்த வாழ்க்கையுடனேயே பொருத்திப் பார்ப்பதாக அந்தக் கவிதை விரியும்.

அதுபோலத்தான் ஆகப் பெரிய ஒரு ஜனநாயக நாட்டில் நாம் இருந்தாலும், இன்னும் நம்முடைய நினைவுகளிலிருந்து அந்தப் பழைய மன்னராட்சி மனோபாவம் இன்னும் மறையவில்லை எனும் விஷயத்தையே இது காட்டுவதாக உள்ளது. அதனால்தான் உளவியல் ரீதியிலேயே நம்மை ஆளுகிறவர்களை இன்னும் ஓர் ‘அரச பிம்பம்’ கொடுத்தே வளர்த்துதெடுத்து வருகிறோம். அரசியலில் வாரிசுரிமையை இயல்பாகவே நாம் எடுத்துக்கொள்வதற்குப் பின்னணியிலும் இதே மனோபாவம்தான் இருக்க வேண்டும்.

அரசியல்தளத்தைப் பொறுத்தவரை தீவிரமாக, ‘ஜனநாயகம்’ குறித்து பொதுவெளியில் உரையாடுகிற இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், இவ்வகைச் சொல்லாடல்களையே பயன்படுத்தி வருவது ரொம்பவே ஆச்சர்யமளிக்கிறது. கட்சி அரசியலைப் பொறுத்தவரை இவ்வகை சொல்லாடல்களோடு மட்டும் இவை நின்றுவிடுவதில்லை. பெரும் விழா எடுத்து, கட்சியின் உயர்மட்டங்களில் உள்ளவர்களுக்கு செங்கோல்கள், கேடயங்கள், வீரவாள் கொடுப்பது தொடங்கி, ‘கழகத்தின் போர்வாளே...’ எனக் கடைநிலைத் தொண்டரொருவர், தனது கைக்காசைப் போட்டு பேனர் அடிப்பது வரைக்குமாக இவை நீள்கின்றன. (சமீபத்தில் தொடங்கப்பட்ட அமமுகவின் தொடக்க விழாவில் டிடிவி தினகரனுக்கு எம்.எல்.ஏ. வெற்றிவேல், வீரவேல் கொடுத்து ஆர்ப்பரித்தபோது, ‘கந்தன் கருணை’ திரைப்படத்தில் நடிகர் சிவாஜி, ‘வெற்றிவேல்... வீரவேல்’ என கர்ஜிக்கிற காட்சி நினைவில் வந்துபோனது!)

இந்திய அரசியல் நீரோட்டத்தில் பீடித்திருக்கும் வாரிசு அரசியலை சில நேரங்களில் வெறுமனே விமர்சித்தாலும், அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து விவாதிக்கவிடாமல் தடுப்பது எது? குடும்ப உறவுகளே அடுத்தடுத்து அதிகாரப் பொறுப்பை ஏற்கும் அரசியல் பண்பாடும் இந்தியா முழுவதும் பல மட்டங்களில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஜனநாயக முறைப்படித் தொடரும் இந்த வாரிசுரிமை அதிகாரத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இன்னும் நினைவிலே முடியாட்சிக்குப் பழக்கப்பட்ட வாழ்க்கையின் எச்சம்தான் அது என்பதை மறுத்துவிட முடியுமா என்ன? (இதோ, இந்தப் பக்கம் 'மூன்றாம் கலைஞரே' என வாசகம் பொறிக்கப்பட்ட பேனர்களில் உதயநிதி பவ்யச் சிரிப்புடன் போஸ் கொடுத்தபடி இருப்பதைப் பார்க்க முடிகிறதுதானே!)

ஜனநாயக இந்தியாவைப் பொறுத்தவரை, சில ஆட்சியாளர்கள் குறுநில மன்னர்கள் போலத் தன்னிச்சையாகச் செயல்பட்டாலும், ஆளும் அரசியல் கட்சியின் ஒரு போதாமையாகவேதான் அதை அணுக வேண்டுமே தவிர, முற்றிலும் அதை மன்னராட்சியோடு ஒப்பிட்டுப் பேசிக் கலைந்துபோக முடியாது. பலரையும் போல, காருக்கு... காரின் டயருக்கு... டயரில் உள்ள டியூப்புக்கு என்றெல்லாம் விதவிதமான கோணங்களில் குனிந்து வணக்கம் வைத்த மரபில் வந்தவர்தான் ஓபிஎஸ். ஆனால் அவர்கூட ஓராண்டுக்கு முன்பான ஒரு பேட்டியில், “தமிழகத்தில் மன்னராட்சி முறையெல்லாம் கிடையாது. அது எப்போதோ ஒழிந்துவிட்டது!” எனச் சொன்னது நினைவிருக்கலாம்.

பொதுச் சமூகத்தில் நாம் பயன்படுத்துகிற சொற்கள் எப்போதும் வெறும் சொற்கள் என்பதோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. அவை, எப்போதுமே சமூகத்தினுடைய அக மற்றும் புற எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. பொறுப்புமிக்க சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்கிற அல்லது அப்படிக் கட்டமைப்பதைத் தடுக்கிற முக்கியக் காரணியாக இருக்கின்றன. அதனால்தான் அரசும், ஊடகமும் அதுவரை பொதுச் சமூகப் பயன்பாட்டில் இருந்துவந்த சர்ச்சைக்குரிய எத்தனையோ சொற்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கி அதற்கான புதிய சொற்களைக் கொண்டுவந்தது. சாதியைச் சொல்லி இழிவுபடுத்தும் சொற்களும் மாற்றுத்திறனாளிகளின் மனதைப் புண்படுத்தக்கூடிய சொற்களும் இன்று பொதுவெளியிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. அவற்றைப் போலவே மன்னராட்சிக்கென்றே உரிய மேற்கண்ட சொல்லாடல்களையும் நீக்குவதற்கான எல்லாக் காரணங்களும் பரவிக் கிடக்கின்றன. ஆகவே இவற்றைப் பயன்பாட்டிலிருந்து நீக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டியது தற்போது அவசியமானதாக இருக்கிறது.

மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிற பிரதிநிதிகள்தான் இந்த ஆட்சியாளர்கள். ஆனால் நடைமுறையிலோ, தங்களைச் சுற்றிக் கட்டற்ற அதிகார ஒளிவட்டத்துடனேயே வலம் வருகின்றனர். அவர்கள் மேல் படிந்துள்ள, ஜனநாயகத்தை ஒடுக்கும் இம்மன்னராட்சி மனோபாவத்தை உடைத்தெறிவதென்பது சாதாரணம் அல்ல. அது பல தளங்களிலிருந்து, அடுக்குகளிலிருந்து செய்யப்பட வேண்டிய மிக நீண்டதொரு செயல்திட்டம். அதன் முயற்சியாகக் குறைந்தபட்சம் ஜனநாயகத்துக்கு ஒவ்வாத இந்த சொல்லாடல்களையாவது ஊடகங்கள் நீக்கத் தொடங்கலாம்தானே?!

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon