மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

கமல் விவசாயிகளின் கருவியா? பாஜகவின் கருவியா?

கமல் விவசாயிகளின் கருவியா? பாஜகவின் கருவியா?

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டத் தயங்கிய நிலையில், எதிர்க்கட்சியான திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு அனைத்துக் கட்சி, விவசாயிகள் அமைப்புகளின் கூட்டத்தை நடத்தியது.

அதற்கு முன்னும் பின்னுமாக திமுக காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டுவரும் நிலையில்... மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இப்போது காவிரிக்காக அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்று நேற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார்.

நேற்று மதியம் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகமான ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசனை விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள். இதன் முடிவில்... காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் வரும் 19ஆம் தேதி ஒரு சிறப்பு உரையாடலுக்கான தொடக்கத்துக்கு அழைப்பு விடுத்தார் கமல்ஹாசன். இதில் யார் முந்தியவர் என்ற பிரச்சினை வராமல் இருக்க மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் இந்தக் கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்படியானால் இதுபோன்ற போராட்ட முன்னெடுப்புகளில் ஸ்டாலின் தலைமை தாங்குவது பற்றி கமல் என்ன கருதுகிறார் என்பதும் கேள்விக்குரியதாகிறது.

ஸ்டாலின் - கமல் சந்திப்பு

இந்தக் கூட்டத்துக்கான கருவியாக தான் இருப்பதாக நேற்று குறிப்பிட்ட கமல்ஹாசன், நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை போனில் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசினார். அவர் வெளியூரில் இருந்த நிலையில், பின் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தொடர்புகொண்டு சந்திப்பதற்கு நேரம் கேட்டார். ஸ்டாலின் சென்னையில் இருந்ததால் ஸ்டாலினை உடனடியாக சந்திப்பதற்கு கமலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

நேற்று மாலை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன், காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். இருவரும் சுமார் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மெத்தனம் காட்டிய நிலையில் மத்திய அரசை வலியுறுத்தி திமுக தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்பு நிகழ்வுகளை கமல்ஹாசனிடம் ஸ்டாலின் நினைவூட்டியதாகத் தெரிகிறது.

அனைவரும் ஒரே குடையில்

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்திக்கவில்லை. கமல்ஹாசன் சந்தித்தபோது, “காலையில் எதேச்சையாக நடந்த சந்திப்பில் விவசாயிகளுடன் அமர்ந்து ஆலோசித்தோம். அப்போது அவர்களே (விவசாயிகள்), இதுவரை வெவ்வேறு கருத்து உடையவர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை கூட்டம் மட்டும் அல்ல; எந்தத் திசையை நோக்கிப் பயணிப்பது என்பதை முடிவு செய்யும் முக்கியமான கூட்டமாக அமைய வேண்டும் என்று கருதினார்கள். அதற்கு என்னை அழைப்பதற்கு அவர்கள் வந்தார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டு நம்முடைய ஒற்றுமைப்பாட்டை பக்கத்து மாநிலங்களுக்கு, ஏன் நாட்டுக்கே காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று நான் நினைத்ததைச் சொன்னபோது அவர்கள் விரும்பினார்கள்.

ஆனால், கூப்பிட்டால் தலைவர்கள் வருவார்களா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. கண்டிப்பாக வருவார்கள்; இந்த மாண்பை அனைவரும் மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன். விவசாயிகள் சார்பில் ஒரு கருவியாகத்தான் ஸ்டாலினை சந்தித்துப் பேசியிருக்கிறேன்” என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், தான் தொடர்புகொண்ட மற்ற தலைவர்கள் பற்றியும் கூறினார்.

“பாகுபாடு, கொள்கைகள் பற்றி எல்லாம் சிந்திக்காமல் தமிழகம், தமிழ் மக்களின் நலன் என்ற ஒரு குடையின் கீழ் பல்வேறு கருத்துகள் உள்ள கட்சிகள் இணைய வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காக நான் ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், டி.டி.வி.தினகரன், விஜயகாந்த், தமிழிசை சவுந்தரராஜன், வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பேசி இருக்கிறேன். ஒரு சிலர் பங்கெடுப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டார்கள். இந்த உரையாடல் தொடரும். தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கிறது” என்றார். ஆளுங்கட்சியான அதிமுகவையும் இந்தக் கூட்டத்துக்கு அழைப்போம் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

திமுகவைத் தாண்டியும் தேவை இருக்கிறது

ஏற்கெனவே திமுக இதுபோன்ற அனைத்துக் கட்சி, விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் நிலையில் இதுபோன்ற இன்னோர் ஒருங்கிணைப்பு ஏன் என்ற கேள்விக்கும் கமல்ஹாசன் பதில் அளித்தார்.

“அதற்கு அவசியம் இருப்பதால்தான் விவசாயிகள் வந்து ஆதரவு கேட்டனர். இல்லையென்றால் அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். எனவே இதை விவசாயிகளுக்கு ஏதுவாகச் செய்துதர வேண்டும் என்பது தான் எனது கருத்து” என்றார் கமல்ஹாசன்.

பாஜக நிலைப்பாட்டுக்குப் பதில் இல்லை

இந்தக் கூட்டத்துக்கு பாஜகவையும் அழைத்திருப்பதாகச் சொல்லும் கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டைப் பற்றி நேற்று ஊடகங்களுக்குப் பதில் சொல்ல மறுத்துவிட்டார். அதை அந்தக் கூட்டத்தில் விவாதிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் தமிழகத்தில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிவரும் நிலையில், பாஜகவின் காவிரி நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு, ‘அதுபற்றி என்ன அவசரம்?’ என்று கேட்கிறார் கமல்ஹாசன்.

இதுபற்றி டெல்டா விவசாயத்தையும் அது தொடர்பாக நடக்கும் நிகழ்வுகளையும் கவனிக்கும் விவசாயிகள் சில கேள்விகளை எழுப்புகின்றனர்.

“இத்தனை நாள் காவிரி விவகாரம் தொடர்பாக பலத்த போராட்டங்களையோ, கூட்டங்களையோ முன்னெடுக்காத கமல்ஹாசன்... மத்திய அரசு வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்ட நிலையில் இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்து அக்கூட்டத்தில் காவிரி பற்றி விவாதிப்போம் என்கிறார். மேலும் திறந்த உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்.

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்ட நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பணிகள் இருப்பதால் பிரதமரால் இதில் கவனம் செலுத்த நேரம் இல்லை என்று நீதிமன்றத்திலேயே கூறியது மத்திய அரசு. ஸ்கீம் என்பதற்கு விளக்கம், மீண்டும் அவகாசம் என்றெல்லாம் காலத்தைத் தள்ளிப் போட்டு கர்நாடகத் தேர்தல் முடிந்த நிலையில் ஒரு வரைவு அறிக்கையை மே 14ஆம் தேதி தாக்கல் செய்தார்கள். இந்த நிலையில் பாஜகவின் நிலைப்பாடு பற்றி கருத்துச் சொல்ல என்ன அவசரம் காத்திருங்களேன் என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறுகிறார் கமல்ஹாசன்.

எங்களுக்கு ஒரு சந்தேகம். கமல்ஹாசன் விவசாயிகளின் கருவியா அல்லது பாஜகவின் கருவியா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்” என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

கமல்தான் பதில் சொல்ல வேண்டும்!

ஆரா

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon