மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

மத்திய அமைச்சரவை மாற்றம்: பின்னணி என்ன?

மத்திய அமைச்சரவை மாற்றம்:  பின்னணி என்ன?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (மே 14) இரவு சிறிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பதிலாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஜவுளித்துறை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறார். தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக இருந்து வந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோட் அத்துறையின் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

எண்ணிக்கை அடிப்படையில் சிறிய அளவிலான மாற்றம் என்றாலும், நபர்களைப் பொறுத்து இது பெரிய அளவிலான மாற்றமாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

ஜேட்லி சிகிச்சையும் மாற்றமும்

மத்திய அமைச்சரவையில் முக்கியமான இடத்தில் இருந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு நேற்று (மே 14) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. சிறுநீரகம் பெற்ற ஜேட்லியும், சிறுநீரகம் வழங்கிய நபரும் நலமாக இருப்பதாகவும் ஜேட்லி ஓய்வில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகவே ஜேட்லி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்ததால் அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனித்தார்.

இந்நிலையில் நேற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து அருண் ஜேட்லி ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால்... முக்கியமான துறையான நிதித்துறை பிரதமரின் நம்பிக்கைக்கு உரிய ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜேட்லி ஓய்வுக்குப் பின் முழுமையான குணம் அடைந்து திரும்பும்வரை நிதித்துறை அமைச்சர் பொறுப்பை பியூஷ் கோயல் வகிப்பார்.

ஸ்மிருதி இரானிக்கு சரிவு!

மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை என்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துறையின் அமைச்சரான ஸ்மிருதி இரானி நேற்று நடந்த மாற்றத்தில் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவரது அமைச்சரகத்தில் இணை அமைச்சராக இருந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு தனிப் பொறுப்பாக தகவல் ஒலிபரப்புத்துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. ரத்தோரிடம் ஏற்கனவே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இருக்கிறது. ஸ்மிருதி இரானி ஜவுளித் துறையில் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார்.

ஏற்கனவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டார். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு துணைக் குடியரசுத் தலைவர் ஆனதால் கடந்த வருடம் அத்துறைக்கு யார் அமைச்சராக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டபோது, ஸ்மிருதி இரானியை இத்துறையின் அமைச்சராக்கினார் பிரதமர் மோடி. அப்போது ஸ்மிருதி இரானிக்கு மோடி கொடுத்த பெரிய முக்கியத்துவம் என்று பத்திரிகைகள் எழுதின.

இந்நிலையில் கடந்த சில மாதங்களில் ஸ்மிருதி இரானி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்.

‘‘பொய் செய்திகளை ஒரு பத்திரிக்கை நிறுவனமோ, டி.வி நிறுவனமோ வெளியிட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளரின் அரசு அங்கீகாரம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். அவர் 2வது முறையும் விதிமுறைகளை மீறினால் ஓராண்டு தடை விதிக்கப்படும். இது குறித்த புகார்கள் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம்(என்பிஏ) போன்ற ஒழுங்கு முறை அமைப்புகளிடம் அளிக்கப்படும். அந்த அமைப்புகள் 15 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கும். புகார் அளித்தவுடன், அதன் முடிவு வெளியாகும் வரை சம்பந்தப்பட்ட நிருபரின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.’’ என்று அண்மையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி அறிவித்தார்.

‘‘பொய் செய்திகளை கட்டுப்படுத்த விரும்பும் பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கை நிறுவனங்கள் இது தொடர்பாக எனது அமைச்சகத்துக்கு வந்து என்னை சந்தித்து கருத்து தெரிவிக்கலாம்’’என்றும் அவர் ட்விட்டரில் பிடிவாதமான கருத்தைப் பதிவிட்டிருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. “அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் உண்மையான நிருபர்களை தடுப்பதற்கான முயற்சி இது’’ என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவித்தனர்.

பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்ததால், இந்த அறிக்கையை ரத்து செய்த பிரதமர் அலுவலகம், ‘‘பொய் செய்தி தொடர்பான பிரச்னைகள் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவால் மட்டும் தீர்க்கப்பட வேண்டும்’’ என பின்வாங்கியது.

விருது வழங்கும் சர்ச்சை!

கடந்த மே 3 ஆம் தேதி நடந்த தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தேசிய விருது பெறும் ஆளுமைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசுத் தலைவர் சிலருக்குதான் விருதுகள் வழங்குவார் என்றும், துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியே மற்றவர்களுக்கு விருது வழங்குவார் என்றும் அந்த சமயத்தில் அறிவிக்கப்பட்டு அதன்படியே விழாவும் நடந்தது. இந்த சர்ச்சையில் குடியரசுத் தலைவர் மாளிகையே தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி தெரிவித்து குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பிரதமருக்கு செய்தி அனுப்பப்பட்டதாகவும் டெல்லியில் அப்போது பேசப்பட்டது.

இந்த சர்ச்சை பின்னணியில்தான் ஸ்மிருதி இரானி தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முக்கியமான மாற்றங்கள் ஒருபக்கம் இருக்க...இணை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணானந்தம் வசம் இருந்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அலுவாலியாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அல்போன்ஸ் இனி சுற்றுலாத் துறையை மட்டும் கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon