மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

கல்விக் கடனுக்கு நிபந்தனை செல்லும்!

கல்விக் கடனுக்கு நிபந்தனை செல்லும்!

‘நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் பெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை செல்லும்’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், அம்மாபேட்டை ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் 2016ஆம் ஆண்டு சேர்ந்த மாணவி சன்ஸ்கிரித், கல்விக் கடன் கேட்டு இந்தியன் வங்கியின் கள்ளிப்பட்டு கிளைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார்.

முதலாம் ஆண்டுக்கு 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம் வழங்கிய 6 லட்சம் ரூபாய் உதவித்தொகையைத் தவிர்த்து 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கட்டணத்தைச் செலுத்தாததால், இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது.

இதையடுத்து, மருத்துவப் படிப்பை முடிக்க தனக்கு 63 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் வழங்க வங்கிக்கு உத்தரவிடக் கோரியும், இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடர அனுமதிக்கும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரியும் மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று (மே 14) நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, “4 லட்சம் ரூபாய் வரை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கல்விக் கடன் வழங்கப்படும்; அதற்கு மேல் சொத்து உத்தரவாதம் வழங்க வேண்டும்” என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வங்கியின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து விதிகளின்படி உரிய கடனை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

“சொத்து உத்தரவாதம் இல்லாமல் அதிக கல்விக் கடனை வழங்க வேண்டும் என மனுதாரர் உரிமை கோர முடியாது” எனவும் நீதிபதி தெரிவித்தார்.

மாணவி தாமதமாக கல்விக் கட்டணம் செலுத்த அனுமதிப்பதாகவும், கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon