மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

நகை வாங்கியவர்களிடம் விசாரணை!

நகை வாங்கியவர்களிடம் விசாரணை!

நீரவ் மோடிக்குச் சொந்தமான நகைக் கடைகளில் நகைகளை வாங்கிய வாடிக்கையாளர்களிடம் வருமான வரித் துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கவுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்ற வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இதன்படி, நீரவ் மோடிக்குச் சொந்தமான நகைக் கடைகளில் நகைகளை வாங்கிய வாடிக்கையாளர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்கான ஒப்புதலை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடமிருந்து வருமான வரித் துறையினர் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே நீரவ் மோடியின் கடைகளில் நகை வாங்கிய வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையில் வருமான வரித் துறையினர் இறங்கியுள்ளனர்.

இதற்காக 90 பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணம் ஒன்றை வருமான வரித் துறையினர் தயாரித்து விசாரணை மேற்கொள்கின்றனர். அதில் நீரவ் மோடியின் கடைகளில் வாங்கப்பட்ட ரத்தினங்கள் மற்றும் நகைகளின் மதிப்பு, அவற்றுக்கான பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவை அடங்கியிருக்கும். இந்த ஆவணத்தில் உள்ள நகை வாங்கிய வாடிக்கையாளர்களின் பெயர் விவரங்கள் இதுவரையில் பொதுப்படையாக வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு நகை வாங்கிய வாடிக்கையாளர்கள் இதில் இடம்பெற்றுள்ளார்கள் என்றும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியின் மனைவி அனிதாவின் பெயர் அதில் ஒன்று எனவும் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஊடகத்தில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon