மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: வரைவுத் திட்டம் அல்ல; துரோகத் திட்டம்!

சிறப்புக் கட்டுரை: வரைவுத் திட்டம் அல்ல; துரோகத் திட்டம்!

ரவிக்குமார்

காவிரி வழக்கில் மத்திய அரசு வரைவுச் செயல் திட்டம் ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 14 பக்கங்கள் கொண்ட அந்த வரைவுத் திட்டத்தில், எந்த மாதிரியான அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்பதை அது விவரித்துள்ளது. இந்த வரைவு அறிக்கை எந்தெந்த விஷயங்களில் நடுவர் மன்றம் முன்வைத்திருந்த மேலாண்மை வாரியத்திலிருந்து வேறுபடுகிறது என ஆராய்வதற்கு முன் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நடுவர் மன்றம் கூறிய காரணங்களைப் பார்ப்போம்.

மேலாண்மை மன்றத்தின் முக்கியத்துவம்

காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்க வேண்டும் என்பதற்கு தனது இறுதி அறிக்கையின் தொகுதி 5இல் விரிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளது. பயிர் செய்யப்படாத மாதங்களில் குறைந்தபட்சம் 900 கியூசெக்ஸ் தண்ணீர் ஆற்றில் ஓட அனுமதிக்கப்பட வேண்டும்; அது சுற்றுச்சூழலுக்கு அவசியம் என்று குறிப்பிட்ட நடுவர் மன்றம், ஒட்டுமொத்த தண்ணீர் அளவிலிருந்து 10 டிஎம்சி தண்ணீரைச் சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்தது. அது மேட்டூர் அணையில் வைக்கப்பட வேண்டும். அங்கிருந்து திறந்து விடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. இதை நடைமுறைப்படுத்துவதைக் காவிரி மேலாண்மை வாரியம் உறுதிப்படுத்த வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியிருந்தது (பக்கம் 111).

கேரள மாநிலம் பம்பாறு நீர்மின் திட்டத்துக்காக 5.6 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்த நடுவர் மன்றம் அந்தத் தண்ணீரை வேறு எதற்கும் உபயோகிக்கக் கூடாது. மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் 0.1 டிஎம்சி சேதாரம் போக மீதமுள்ள நீரைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதையும் காவிரி மேலாண்மை வாரியம்தான் உறுதி செய்ய வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியிருந்தது (பக்கம் 154).

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதிக்கு 7 டிஎம்சி தண்ணீரை நடுவர் மன்றம் ஒதுக்கியது. அதைத் தமிழ்நாடு முறையாகக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கிறதா என்பதை உறுதி செய்வதும் மேலாண்மை வாரியத்தின் பணிதான் என்று நடுவர் மன்றம் கூறியது (பக்கம் 198).

கேரளாவுக்கு ஒதுக்கீடு செய்த 30 டிஎம்சி தண்ணீரை அம்மாநிலம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்வரை கர்நாடகாவும் தமிழ்நாடும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதையும் மேலாண்மை வாரியம்தான் கவனித்து உறுதி செய்ய வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியது (பக்கம் 205).

புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் ஏதேனும் சிக்கல் நேர்ந்தால் அதைக் காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்த்துவைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியுள்ளது (பக்கம் 206).

கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை உறுதி செய்ய கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பிலிகுண்டுலு என்ற இடத்தை நடுவர் மன்றம் நிர்ணயித்தது. தண்ணீர் அங்கே சரியாக வழங்கப்படுகிறதா என்பதை மேலாண்மை வாரியம் உறுதி செய்ய வேண்டும் என்று நடுவர் மன்றம் குறிப்பிட்டது (பக்கம் 208).

கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்குள் கபினி மற்றும் அதன் கிளை நதிகளில் தண்ணீர் எவ்வளவு வருகிறது என்பதைக் கண்காணிப்பதும் மேலாண்மை வாரியத்தின் பொறுப்பு என்று நடுவர் மன்றம் கூறியது (பக்கம் 209).

வழக்கமான மழைப் பொழிவு இல்லாத, வறட்சி பாதித்த ஆண்டு எது என்பதை நிர்ணயிக்கவும், அப்போது கையிருப்பில் உள்ள தண்ணீரை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதை முடிவு செய்யவும் மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரம் உள்ளது என்று நடுவர் மன்றம் கூறியது (பக்கம் 211).

ஒவ்வொரு மாதமும் காவிரியில் கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரின் அளவைத் தேவைப்பட்டால் மாற்றி அமைத்துக்கொள்ளும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கு உண்டு என்று நடுவர் மன்றம் கூறியது (பக்கம் 212).

ஒவ்வோர் ஆண்டும் மழைப் பொழிவின் தன்மை, அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கே உண்டு என்று நடுவர் மன்றம் கூறியது (பக்கம் 213).

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தொகுதி 5இல் பக்கம் 224 முதல் பக்கம் 236 வரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் கட்டமைப்பு, அதிகாரம், செயல்பாடுகள், அவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, அவற்றுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் தகுதிகள், எண்ணிக்கை, அவர்களது ஊதியம், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் எல்லாவற்றையும் காவிரி நடுவர் மன்றம் விரிவாக விளக்கியுள்ளது. அது மட்டுமின்றி காவிரி மேலாண்மை வாரியத்துக்கான 14 வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துத் தந்துள்ளது.

வரைவுத் திட்டத்தின் அம்சங்கள்

தற்போது மத்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுத் திட்டத்தை நடுவர் மன்றம் கூறியுள்ளவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போதைய வரைவுத் திட்டத்தில் சில அம்சங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தமது பணியின் அங்கமாக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு (indemnity) வழங்கப்பட்டிருக்கிறது (வரைவுத் திட்டம் பக்கம் 5). அதுமட்டுமின்றி தண்ணீர் சிக்கனம், புதிய வகை விவசாய முறைகள் குறித்து மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. (வரைவுத் திட்டம் பக்கம் 9). இவை ஏற்கத்தக்கவை என்றாலும் முக்கியமான சில மாற்றங்கள் இதில் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் ஏற்க முடியாது.

மேலாண்மை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் நீர்ப் பாசனத் துறையில் வல்லுநராகவும் தலைமைப் பொறியாளராகவும் 20 வருட அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது (பக்கம் 224). அந்தத் தகுதிகளை வரைவுத் திட்டம் தளர்த்தியிருக்கிறது. அவர் மூத்த, திறமைவாய்ந்த அதிகாரியாக இருக்கலாம் அல்லது செயலாளர், கூடுதல் செயலாளர் என்ற நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கலாம் என மாற்றியிருக்கிறது (வரைவுத் திட்டம் பக்கம் 2)

மத்திய அரசால் நியமிக்கப்படும் இரண்டு முழு நேர உறுப்பினர்களில் ஒருவர் நீர்ப் பாசன பொறியாளராக 15 வருட அனுபவமும் தலைமைப் பொறியாளர் என்ற நிலைக்குக் குறையாத பணித் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்; இன்னொருவர் 15 வருட கள அனுபவம் கொண்ட மதிப்புவாய்ந்த வேளாண் வல்லுநராக இருக்க வேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது (பக்கம் 225). ஆனால், அந்தத் தகுதிகள் ஒருவர் மத்திய நீர் பொறியியல் துறையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், இன்னொருவர் வேளாண் அமைச்சகத்தில் ஆணையர் பதவியில் இருப்பவர் என்பதாக வரைவுத் திட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது (பக்கம் 2). இதிலும் அனுபவம் என்பது நீக்கப்பட்டு மத்திய அரசின் அதிகாரிகள் என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு தான் விரும்பும் எவரையும் தலைவராகவோ, உறுப்பினர்களாகவோ நியமித்துக்கொள்ள முடியும்.

இந்த அமைப்புக்கான செயலாளரை வாரியம்தான் நியமிக்கும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. ஆனால், அவரை மத்திய அரசு நியமிக்கும் என வரைவுத் திட்டத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. வாரியத்தின் கட்டமைப்பைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டியிருக்கிறது என்பதையே இதன் மூலம் நாம் புரிந்துகொள்கிறோம்.

நடுவர் மன்றத்தின் முடிவைச் செயல்படுத்த எந்த மாநிலமாவது மறுத்தால் மத்திய அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. அத்துடன் ‘மத்திய அரசின் முடிவே இறுதியானது’ என இப்போது வரைவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் முடிவே இறுதியானது என்பதற்குப் பதிலாக வாரியத்தின் முடிவே இறுதியானது என ஆக்கியிருக்க வேண்டும்.

வாரியத்தில் நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள். அவர்கள் இணைந்து எடுக்கும் முடிவு ஜனநாயக பூர்வமாக இருக்கும். மத்திய அரசு மட்டும் முடிவெடுத்தால் அது அரசியல் சார்போடுதான் இருக்கும். தமிழ்நாட்டில் தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் நிலை இன்னும் கால் நூற்றாண்டு காலத்துக்குக் கண்ணிலேயே தெரியவில்லை என்பதால் தேசியக் கட்சிகள் ஆட்சி நடத்தும் கர்நாடகாவுக்குச் சாதகமாகத்தான் மத்திய அரசின் முடிவு அமையும். அது மட்டுமின்றி இப்போது தேர்தலைக் காரணம் காட்டி இத்தனை மாதங்கள் இழுத்தடித்ததுபோல எதிர்காலத்திலும் மத்திய அரசு நடந்துகொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

மாநிலங்களில் உள்ள நீர்த் தேக்கங்கள் வாரியத்தின் / அமைப்பின் வழிகாட்டுதலில் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும் என இப்போதைய வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது (பக்கம் 7). அதாவது அணைகள் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்பதே இதன் பொருள். அணைகளை வாரியம் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டாலொழிய நீர்ப் பங்கீடு முறையாக நடக்காது என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி தரப்பில் வலியுறுத்தப்படும்போது அதை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.

இந்த அமைப்பு பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என மத்திய அரசின் வரைவுத் திட்டம் கூறுகிறது. இந்தப் பிரச்சினையில் நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும் கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில்தான் பிரச்சினை அதிகமாக உள்ளது. அப்படியிருக்கும்போது பெங்களூருவில் தலைமையிடம் இருந்தால் அது சிக்கல் அதிகரிக்கவே வழிவகுக்கும். எனவே, புதுச்சேரியிலோ அல்லது திருவனந்தபுரத்திலோ அதன் தலைமையிடத்தை அமைக்கலாம். இல்லாவிட்டால் கோவாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே சிக்கலாகியிருக்கும் மஹா தாயி நதிநீர் பங்கீடு தொடர்பான நடுவர் மன்றத்தின் தலைமையிடம் டெல்லியில் அமைக்கப்பட்டிருப்பதைப்போல இதையும் டெல்லியில் அமைக்கலாம்.

இப்போதைய வரைவுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் அமைப்புக்கு என்ன பெயர் வைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறும் மத்திய அரசு தான் உருவாக்கும் அமைப்பு அதிகாரம் உள்ள அமைப்புதான் எனக் கூறியுள்ளது. மத்திய அரசின் கூற்றுப்படி இது அதிகாரமுள்ள அமைப்பாக இருந்தால் எதற்காக அதை மேலாண்மை வாரியம் என அழைப்பதற்குத் தயங்க வேண்டும்?

மத்திய அரசு உருவாக்க விரும்பும் அமைப்பு மத்திய அரசின் அதிகாரிகளைக் கொண்டதாகவும், மத்திய அரசின் பிடியிலேயே இருக்கக் கூடியதாகவும், அமைப்பின் தலைவர் உறுப்பினர்கள் எவருக்கும் தகுதிக்கு முக்கியத்துவம் தராததாகவும் உள்ளது.

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசும், நீதிமன்றங்களும் தமிழ்நாட்டுக்கு நியாயம் செய்யவில்லை என்பதால்தான் நடுவர் மன்றம் அமைக்கக் கோரினோம். அதன் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்தவைப்பதற்கே பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடினோம். உச்ச நீதிமன்றமும்கூட தமிழ்நாட்டுக்கு நியாயம் செய்யவில்லை என்பதையே அதன் இறுதித் தீர்ப்பும் அதன் பின்னரான நடவடிக்கைகளும் காட்டுகின்றன.

தன்னாட்சி அதிகாரம் கொண்டதும் நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்டதுமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அதன் பொறுப்பில் அணைகள் ஒப்படைக்கப்படுவது மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு நியாயம் வழங்கும். இப்போது மத்திய அரசுமுன் வைத்திருக்கும் வரைவுத் திட்டம், 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிந்து 1974இல் எப்படி மத்திய அரசின் தயவை எதிர்பார்த்துத் தமிழ்நாடு தவித்து நின்றதோ அப்படியான நிலைக்கே வழிவகுக்கும். தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுத்துச்செல்லும் இந்த வரைவுத் திட்டம் துரோகத் திட்டமேயாகும். தமிழக அரசு இதை ஏற்கக் கூடாது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: முனைவர் ரவிக்குமார் அரசியல், கலை, இலக்கிய விமர்சகர். மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon