மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

அமைச்சரவை ஒப்புதல் இல்லாத வரைவுத் திட்டம்!

அமைச்சரவை ஒப்புதல் இல்லாத வரைவுத் திட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து மத்திய அரசு விசாரித்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “கர்நாடகத் தேர்தலால் காவிரி வரைவு செயல் திட்ட விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு தாக்கல் செய்வோம்” என்று கூறிய மத்திய அரசு, வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசமும் கோரியது.

ஆனால், இதை மறுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, “வரும் 14ஆம் தேதிக்குள் காவிரி வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும், “இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகிப் பதிலளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று (மே 15) விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங், காவிரி வரைவுத் திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் வைத்துத் தாக்கல் செய்தார்.

திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது, “மத்திய அரசு தரப்பில் ஆஜரான கே.கே.வேணுகோபால், இந்தத் திட்டம் அமைச்சரவையால் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “நாம் மீண்டும் ஒரு முறை வழக்கு நடத்த முடியாது. சட்ட பிரிவு 6Aஇன் கீழ் ஒரு திட்டம் தேவை. அது கட்டாயமாகிறது” என்று குறிப்பிட்டார்.

திட்டம் குறித்து விவாதம் எழுந்தபோது, “வாரியமா, குழுவா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யட்டும்” என்று வேணுகோபால் தெரிவித்தார்.

தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, “இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் உங்கள் (நீதிபதிகள்) முன்னிலையிலே எடுக்கப்பட வேண்டும். பிப்ரவரி 16ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை அது ஒத்திருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் (மாநிலங்கள்) ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

எனினும், மத்திய அரசின் வரைவுத் திட்டம் சரியா, தவறா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யாது என்று தெரிவித்த நீதிபதிகள், “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்து இருக்கிறதா என்பதைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஆய்வு செய்துகொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியது.

இதையடுத்து, வழக்கை மே 16ஆம் தேதிக்கு (நாளை) ஒத்தி வைத்தது.

குறைந்த அவகாசமே இருப்பதால் நேற்றே வரைவு செயல் திட்ட நகல்கள் மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டது. மாநில அரசுகள் அதில் உள்ள அம்சங்களால் தங்கள் மாநிலத்துக்கான சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் 16ஆம் தேதி வாதம் செய்யவுள்ளன.

இதற்கிடையே மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon