மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

எபோலா: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

எபோலா: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

எபோலா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால் உலக நாடுகள் எல்லாம் பெரும் அச்சத்தில் உள்ளன. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் எபோலா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் எபோலா வைரஸ் வெளிப்பட்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் முழுவதிலும் பரவியிருந்தது. இந்த வைரஸால் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

1976ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட எபோலா வைரஸ் ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் ‘எபோலா வைரஸ்’ என்ற பெயர் வந்தது. எபோலா வைரஸ் விலங்குகளின் ரத்தம் மற்றும் திரவம் வழியாக மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்களின் குடும்பத்தாருக்கும், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் இந்த வைரஸால் நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இந்நோய் வந்தால் 90 சதவிகிதம் மரணத்தில் முடியும்.

இந்த நிலையில், ஆப்பிரிக்காவின் காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவிவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எபோலா நோயால் பாதிக்கப்பட்டு, 18 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்த நிலையில், இதில் 2 பேர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

தற்போது 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் 18 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாட்டைச் சுற்றியுள்ள ஒன்பது நாடுகளுக்கு எபோலா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். இதனால் உலக சுகாதார நிறுவனம் எல்லா நாடுகளையும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

காங்கோவில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையும், உலக சுகாதார அமைப்பும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், முறையான தீவிர சிகிச்சை மூலம் நோயாளியைக் குறிப்பிட்ட காலம் உயிர் வாழ வைக்கலாம் அல்லது குணப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon