மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

கர்நாடகத் தேர்தல்: இன்று முடிவு!

கர்நாடகத் தேர்தல்: இன்று முடிவு!

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. காலை 9 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 12ஆம் தேதியன்று கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 72.13 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஜெய நகர் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவில்லை. ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மரணத்தினால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டை பிரச்சினையை முன்வைத்து ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் மே 28ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மீதமுள்ள 222 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, மே 15ஆம் தேதி நடைபெறுமெனத் தெரிவித்திருந்தது தேர்தல் ஆணையம். அதன்படி, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. 9 மணியில் இருந்து முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா முழுவதும் 38 இடங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. பெங்களூருவில் மட்டும் ஐந்து இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதியன்று வெளியான வாக்குக் கணிப்பு முடிவுகளில் பெரும்பாலானவை, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறின. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் என்று மூன்று கட்சிகளுமே எதிர்பார்ப்பில் உள்ளன. குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நாளை பெங்களூரு செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி, தனது மகன் நிகிலுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றுள்ளார் என்றும் ஓய்வுக்காகச் சென்றுள்ளார் என்றும் இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் விவாதிப்பதற்காகவும் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவினரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.

மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட கர்நாடகத் தேர்தலுக்காக, கடந்த ஜனவரி மாதம் முதலே பாஜக, காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களது முயற்சிகளுக்கான பலன் என்னவென்பது, இன்றைய தேர்தல் முடிவுகள் முழுதாக வெளியாகும்போது தெரியவரும்.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon