மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

கோலிசோடா 2: கௌதம் இணைந்த பின்னணி!

கோலிசோடா 2: கௌதம் இணைந்த பின்னணி!

கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தில் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்த பின்னணி குறித்து இயக்குநர் விஜய் மில்டன் விவரித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு வெளிவந்த கோலிசோடா திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக இருந்த விஜய்மில்டன் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே15) சென்னை சூரியன் எஃப்.எம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் மில்டன் மற்றும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

கோலிசோடா 2 உருவானதைப் பற்றி பேசிய விஜய் மில்டன், “கோலி சோடா முதல் பாகத்தில் அடையாளமே இல்லாத நாலு பசங்க, அடையாளம் வேண்டும் என்று போறாடுறாங்க. அதன் தொடர்ச்சியாக இந்த கதையில், அப்படிக் கிடைத்த அடையாளத்தைக் காப்பாற்றுவதற்கும், பெருசு படுத்துவதற்கும் அவங்க, முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சிக்கும் போது ‘உனக்கு எதுக்கு இது’ என்றுதானே எல்லாரும் கேட்பாங்க. இன்னும் சொல்லப் போனா சின்னச் சக்கரம், சின்னச் சக்கரமாகத்தான் இருக்கனும். அப்பதான் பெரிய சக்கரம் எல்லாம் சுகமா சுத்த முடியும். அப்படி சின்னச் சக்கரத்தைச் சின்னச் சக்கரமா வச்சுக்க முயற்சி செய்கிற போது, அதை ஒடச்சுட்டு நாலு பேரு வெளியில வருவதுதான் கோலிசோடா 2” என்று கதையை விவரித்தார்.

இந்தப் படத்தில் எப்படி கௌதம் மேனன் இணைந்தார் என்பதை விளக்கிய விஜய் மில்டன், “கௌதம் சார்கிட்ட, படத்தோட கதை சொன்னதும் அவர் குரலில், அவரே ‘கையெல்லாம் உடையும்’ பாடலுக்கான வரிகள் எழுதி பாடி அனுப்பி இருந்தார். படத்துக்கு ட்ரெய்லர், டீசர் எல்லாம் பண்ணி இருப்பாங்க. ஆடியோக்கு ஒரு டீசர் பண்ணலாம்ன்னு வெறும் வாய்ஸ்லயே ஒரு டீசர் பண்ணினோம். இதுக்கு யார் வாய்ஸ் நல்லா இருக்குமென்று பார்க்கும் போது கௌதம் சார் சரியா இருப்பாங்கன்னு தோணுச்சு.

அதோட அவர் மாதிரி ஒருத்தர் இந்த படத்தில் நடிச்சா நல்லா இருக்கும் என்று நினைத்தோம். பார்ப்பதற்கு பாலிஷா இருப்பார். ஆனால் உள்ள ஒரு லோக்கல் ரவுடி மாதிரி, கையில காப்பெல்லாம் போட்டு சட்டையை தூக்கி விட்டு வருவார். அது ஒரு போலீஸ் ஆபிசர் கேரக்டர்” என்றார்.

பாடல் பற்றி இசையமைப்பாளர் அச்சு கூறும் போது, “தீம் மியூசிக், வாய்ஸ் ஓவர் இரண்டையும் மிக்ஸ் பண்ணி ஏன் ஒன்று பண்ணக் கூடாது என்று நினைத்து கௌதம் சாருடன் இணைந்து பண்ணினோம். இதை ரிவல்ஸ்ல சவுண்ட் டிசைன் பண்ணியது முக்கியமானது” என்றார்.

இறுதியாக இப்படத்தில் நடித்தவர்கள் பற்றி பேசிய விஜய் மில்டன், “கோலிசோடா பண்ணும் போது நாங்க எதிர்கொண்ட பிரச்சினை, பசங்க எல்லோருக்கும் 13 வயது. கோவத்தை முழுவதும் காண்பித்து விட முடியாது. அந்த வயசுக்கு இவ்வளவுதான் பேச முடியும். அவங்க அடிச்சா இவ்வளவுதான் அடிப்பாங்க என்று இறக்கி பண்ணோம். ஆனா இதுல எந்த கட்டுப்பாடும் கிடையாது ஏறி அடித்திருக்கிறோம். மேலும் கோலிசோடா 2வில் வேற பசங்களை வைத்து பண்ணுவதற்கான காரணம். இன்னும் அவங்க சின்ன பசங்களாத்தான் இருகாங்க. இதில் காதல் இருக்கிறது மேலும் இறங்கி அடிப்பதால் அதற்கு ஏற்ற வயதுடைய பசங்க தேவை” என்றார்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி சாரை வித்தியாசமாக நீங்க பார்ப்பீங்க. ஆனால் இந்த படத்தில் ஒரு 60 வயசு நபரா, சரியா நடக்க முடியாம, எல்லாத்துக்கும் வளைந்து கொடுக்கக்கூடிய, நமக்கெதுக்கு இது என்று இருக்கக்கூடிய கதாபாத்திரமா பண்ணி இருக்காங்க. ரொம்ப அருமையா வந்திருக்கு அவரோட பகுதியெல்லாம். இன்றைக்கு வரைக்கும் நடித்ததற்கு ஒரு பைசா கூட காசு வாங்கவில்லை. ‘நீங்க என்னைக்கு படத்தை விக்கிறீங்களோ, அன்னைக்கு எவ்வளவு தோணுதோ அதைக் கொடுங்க’ என்று சொன்னார். அதற்கு நன்றி சொல்லிக்கிறேன்” என்று பேசி முடித்தார் விஜய் மில்டன்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon