நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கூலி வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு துறை சார்ந்து துப்புரவுப் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு அவர்களது ஊதியம் சரிவர வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கூலி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளுடன் நேற்று (மே 14) ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நான்கு நகராட்சிகளில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 610 ரூபாய் கூலியில், பாதியாக ரூ. 300 மட்டுமே வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. தொழிலாளர்களுக்குக் கூலி வழங்குவதில் முறைகேடு செய்திருப்பதாக நான்கு நகராட்சிகளின் ஆணையர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கத் தமிழகத் தொழிலாளர் நலத் துறை ஆணையருக்கு சம்மன் அனுப்பியுள்ளேன்" என்று தெரிவித்தார்.