சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சீமராஜா படத்தின் முக்கியப் பணிகளை இன்று (மே 15) துவங்கியிருக்கிறார்கள்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவதாக இணைந்திருக்கும் படம் சீமராஜா. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். பொன்ராம் படங்களில் பெரும்பாலும் கதாநாயகிகள் பாவாடை தாவணியில் வலம்வருவார்கள். அதே போல் இதிலும் சமந்தா பாவாடை தாவணியில், ரங்கஸ்தலம் படத்திற்குப் பிறகு கிராமத்துப் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு தென்காசி மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் படத்தின் டப்பிங் உள்ளிட்ட மற்ற பணிகளை இன்று துவங்கியிருக்கின்றனர்.
சீமராஜாவின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான டப்பிங் பணிகள் லெ மேஜிக் லேண்டர்ன் ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கின. இதில் சிவகார்த்திகேயன், பொன்ராம், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்திலும், ராஜேஷ் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். சீமராஜா படத்தினை செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.