நிர்மலா: ஆளுநரிடம் அறிக்கை!

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரித்து வந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தனது அறிக்கையை நேற்று ஆளுநரிடம் தாக்கல் செய்தார்.
மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்ததற்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிபிசிஐடி போலீஸார் உதவிப் பேராசிரியர் முருகனையும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். சந்தானம் குழுவினர் பல்கலைக்கழக அதிகாரிகள், சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணையை முடித்துள்ள நிலையில், நேற்று (மே 14) ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார் சந்தானம்.