டெலினார் இந்தியா நிறுவனத்தை ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மே 14ஆம் தேதியன்று தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “டெலினார் இந்தியா நிறுவனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மே 14 காலை தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் அளித்தது” என்று தெரிவித்தார். இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் 1,700 கோடி ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகை பெறுவதற்கு தொலைத் தொடர்புத் துறை உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்க அறிவுறுத்தியுள்ளது.
இந்த இணைப்பு ஏர்டெல் நிறுவனத்தின் அலைக்கற்றையை ஏழு தொலைத் தொடர்பு வட்டாரங்களில் மேம்படுத்தும். ஆந்திரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, குஜராத், கிழக்கு உத்தரப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய ஏழு தொலைத் தொடர்பு வட்டாரங்களில் டெலினார் இந்தியா தனது சேவைகளை வழங்கி வருகிறது. டெலினார் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை இணைப்பதற்கான முன்மொழிதலுக்கு மார்ச் 8ஆம் தேதியன்று தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.