மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

நில ஆக்கிரமிப்பு: சாஸ்த்ராவின் கோரிக்கை பரிசீலனை?

நில ஆக்கிரமிப்பு: சாஸ்த்ராவின் கோரிக்கை பரிசீலனை?வெற்றிநடை போடும் தமிழகம்

தஞ்சாவூரில் திறந்த வெளிச்சிறைச்சாலைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துக்கொண்டது. அரசின் நிலங்களுக்குப் பதிலாக வேறு நிலங்களை தருவதாக அந்த பல்கலைக்கழகம் முன்வைத்த திட்டத்தை அரசு பரிசீலித்துவருவதாக சாஸ்த்ராவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் திருமலைச்சமுத்திரத்தில் 1985இல் திறந்த வெளிச் சிறைச்சாலை கட்டுவதற்காகச் சிறைத் துறைக்கு 58.17 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தனது கட்டடங்களைக் கட்டிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகச் சிறைத் துறையானது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசைத் தொடர்ந்து வெளியேற்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. வெளியேற்ற நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது. இவ்வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தாங்கள் எடுத்துக்கொண்ட நிலங்களுக்கு பதிலாக புதுக்கோட்டையில் வேறு நிலங்களைத் தருகிறோம் என்று ஒரு பேரம் பேசியது. ஆனால், அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பாளர்களின் பேரத்தை ஏற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கே நிலத்தை அளிப்பது இதுபோன்ற வழக்குகளில் தவறான முன்மாதிரியை ஏற்படுத்தி விடும் என்று கூறி அரசு இதை நிராகரித்துவிட்டது.

தற்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞர், பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை அரசு பரிசீலித்துவருவதாகக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சிறைத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி, பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், யார் வேண்டுமானாலும் எந்த நிலத்தையும் ஆக்கிரமித்துக்கொள்வார்கள், அதற்கு பதிலாக வேறு நிலத்தைக் கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள் இது ஒரு மோசமான முன்மாதிரி ஆகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon