மும்பை தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் 2008ஆம் ஆண்டு கடல் வழியாகப் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் குறித்து கடந்த சனிக்கிழமை (மே 13) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருந்தார்.
"பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எல்லை தாண்டிச் சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி 150 பேரைக் கொல்ல நாம் அனுமதித்திருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர் மட்டக் குழு கூட்டம் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி தலைமையில் நேற்று (மே 14) நடைபெற்றது.
"மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் ஆதாரங்களும் உண்மைகளும் மறுக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது ஏற்கக்கூடியது இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரிப் அளித்திருக்கும் கருத்துகள் தவறானவை” என தேசியப் பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கறிஞர் அப்தாப் விர்க், நவாஸ் ஷெரீப்பின் கருத்து தேசத்துக்கு துரோகம் விளைவிப்பதாக உள்ளது என லாகூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் மீது தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.