மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

தன்னையே பரிசோதனைப் பொருளாக மாற்றிக்கொண்ட ரஜினி

தன்னையே பரிசோதனைப் பொருளாக மாற்றிக்கொண்ட ரஜினி

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 72

இராமானுஜம்

ரஜினிகாந்துக்கு பாபா படம் அரசியல், சினிமா நண்பர்கள், தனது குடும்ப உறுப்பினர்கள், சினிமா வியாபாரம் ஆகியவற்றைப் பற்றிய தெளிவையும் புரிதலையும் கற்றுக் கொடுத்தது.

சினிமாவில் நாயகனாக நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதைக் கடந்து, பிழைக்க வந்த ஊரில் நம்பர் ஒன் நடிகனாகப் பெற்ற அங்கீகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலில் இருந்தார். இளைய நடிகர்கள் நடித்த படங்களுக்கு தன் படங்கள் போல ஒப்பனிங் இல்லை என்றாலும் சமச்சீராக தியேட்டர்களில் நான்கு வாரங்களைக் கடந்து ஓடுவது ரஜினியை யோசிக்க வைத்தது. தொடர்ந்து படத்தில் நடிக்காவிட்டால் சினிமாவில் நாம் காணாமல் போய்விடுவோம் என்பதைப் புரிந்துகொண்ட ரஜினி ஜக்குபாய் படத்திற்கான பூஜையை ஏவிஎம் பிள்ளையார் கோவிலில் நடத்தினார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம் என அறிவிக்கப்பட்டது.

பூஜையில் ரஜினி காலில் பூட்ஸ் அணிந்திருக்கும் புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியது.

பாபா படத்தில் சிகரெட்டுடன் இருந்த புகைப்படங்கள், காட்சிகளை, புகையிலைப் பழக்கத்தை ஒழிக்க வேண்டும் எனப் போராடிவந்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் எதிர்த்துவந்தனர்.

திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளில் ரஜினி மட்டுமல்ல கதாநாயக நடிகர்கள் யாருமே நடிக்கக் கூடாது என்று அன்புமணி வேண்டுகோள் வைத்திருந்தார்.

அப்போது அதனை ரஜினிகாந்த் எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அதன் விளைவாக, பாபா படத்துக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்தது. ஜெயங்கொண்டத்தில் பாபா படப்பெட்டி கடத்தப்பட்டது, விருத்தாசலத்தில் படப்பெட்டி பாமகவினரால் தூக்கிச் செல்லப்பட்டது, இதனை மட்டும் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தி மீட்டுக் கொடுத்தனர்.

இவற்றையெல்லாம் யோசித்து ஜக்குபாய் பட பூஜையை நடத்தியும் பிசிறடித்தது. எந்தக் காரணமும் கூறாமல் படத் தயாரிப்பு கைவிடப்பட்டது.

ஆனால், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்கிற பழமொழிக்கு ஏற்ப ரஜினி சும்மா இருக்க விரும்பவில்லை.

சொந்தமாகவும் தயாரிக்கக் கூடாது, வெளி கம்பெனி தயாரிப்பு என்றால் தனக்கு என்ன சம்பளம் என்பதைத் தீர்மானிக்க முடியாது என்பதற்கு முடிவு காண விரும்பிய ரஜினி தன்னைப் பரிசோதனைப் பொருளாக மாற்றிப் பார்க்க ஆசைப்பட்டார். அதற்குப் பிற தயாரிப்பாளர்கள் தயாராக மாட்டார்கள் என்பதால் சிவாஜி குடும்பத்திற்குத் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற கால்ஷீட் ஒதுக்கினார் ரஜினி.

சிவாஜி குடும்பத்திற்கு ஆனந்தம். சிவாஜி புரொடக்‌ஷன், ரஜினி இரு தரப்புக்கும் கைக்கு அடக்கமான பி.வாசு கன்னடத்தில் இயக்கி வெற்றி பெற்ற ஆப்த மித்ரா கதையை ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு இயக்குனராக வாசு ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்திற்கு சந்திரமுகி எனப் பெயர் வைக்கப்பட்டது. குறுகிய காலத் தயாரிப்பாகச் சுமார் 50 நாட்களில் படம் எடுத்து முடிக்கப்பட்டது.

ரஜினிக்கு சம்பளம் என்ன என்பது முடிவு செய்யப்படாமல் படப்பிடிப்பு முடிந்தது. மோசமான நிதி நெருக்கடியில் சிவாஜி புரொடக்‌ஷன் இருந்ததால், வியாபாரம் முடிந்த பின் தனக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளும் முடிவில் இருந்தார் ரஜினி. படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதுவே அந்த படத்திற்கான பலம் என்பதை சந்திரமுகி வசூல் உறுதிப்படுத்தியது.

பட வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சினிமா துறையில் மட்டுமல்ல, அரசியல், சமூகத் துறைகளிலும், பெண்கள் மத்தியிலும் சந்திரமுகியை எதிர்பார்ப்புக்கு உரிய படமாக மாறியது.

அதே நேரம் திருப்பாச்சி வெற்றிக்குப் பின் விஜய் நடித்த சச்சின் படம் முடியும் தறுவாயில் இருந்தது. இப்படத்தை 2005 ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். இதனை அறிந்த சிவாஜி குடும்பத்தினர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் மிகுந்த சிரமத்துடன் படத்தை முடித்திருக்கிறோம். ஒரு வாரம் தள்ளி வாருங்கள் என வேண்டுகோள் வைத்தனர்.

ஜனவரியில் வெளியான திருப்பாச்சி மிகப் பெரும் வெற்றி பெற்றிருந்தது. அதனை சச்சின் மூலம் அறுவடை செய்ய விரும்பிய கலைப்புலி தாணு மறுத்துவிட்டார். வேறு வழியின்றி நீண்ட வருடங்களுக்குப் பின் ரஜினி நடித்த சந்திரமுகி படத்திற்கு நேரடிப் போட்டியாளராக சச்சின் ரிலீஸ் செய்யப்பட்டது.

வெற்றி யாருக்கு? ஆடியோ வெளியீட்டில் ரஜினி பேசிய அரசியல் என்ன.? நாளை பகல் 1 மணிக்கு.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68 பகுதி 69 பகுதி 70 பகுதி 71

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon