சென்னையில் மே 15ஆம் தேதியன்று, மின்சக்தித் துறையில் பெண் தொழில்முனைவோருக்கான திட்டமான பவர்டு (POWERED) தொடங்கப்படவுள்ளது. டி.எஃப்.ஐ.டி இந்தியா மற்றும் ஷெல் ஃபவுண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் சோன் ஸ்டார்ட் அப்ஸ் ஃபார் இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இத்திட்டத்தை மும்பையில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று துவங்கின. பிறகு, இத்திட்டக் குழு அகமதாபாத், டெல்லி, டேராடூன் ஆகிய இடங்களுக்கும் சென்று திட்டத்தைப் பரப்பி வருகிறது.
புதுமைகளுடனான வளர்ச்சியை உருவாக்கவும், புதுத் தொழில்நுட்பங்களுடன் ஆரம்ப நிலை நிறுவனங்களைக் கட்டமைக்கவும், குடும்பங்கள் தங்களது மின்சக்திப் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்ளப் புதுமையான தொழில் அமைப்புகளைக் கொண்ட பெண் தொழில் முனைவோரிடமிருந்து பவர்டு குழு விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறது. மின்சக்தி கிடைப்பதில் இன்று இருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள் மீது கவனம் செலுத்துவதையும், பெண் தொழில் முனைவோருக்கு வாய்ப்பளிக்கப்படுவதையும் நோக்கமாகக் கொண்டு பவர்டு திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவையும் இத்திட்டத்தின் பங்குதாரர்களாக உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோருக்குப் போட்டிகள் நடத்தப்படும். மின்சக்தித் துறையில் தொழில் புரியும் பெண்கள் தங்களது தொழில் திட்டம் குறித்து விளக்க வாய்ப்பளிக்கப்படும். போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படும் எனவும், இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.