மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 4 ஆக 2020

மே 29: தமிழக சட்டமன்றம் கூடுகிறது!

மே 29: தமிழக சட்டமன்றம் கூடுகிறது!

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 15ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார். மார்ச் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. 22ஆம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். கூட்டத் தொடரின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இன்று (மே 15) சட்டமன்ற செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரை வரும் 29ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்ற மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. அன்றைய தினத்தில் பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடி அவையை எத்தனை நாள் நடத்துவதும் என்பது குறித்துத் தீர்மானிக்கவுள்ளது.

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு, காவிரி பிரச்சினை, நீட் தேர்வு குளறுபடிகள், குட்கா விவகாரம், அரசு ஊழியர்கள் போராட்டம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமைகள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பத் தயாராகிவருகின்றன.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்படுள்ள நிலையில், வரும் 29ஆம் தேதிக்குள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வருமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon