மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

கர்நாடகத் தேர்தலில் வாட்ஸ் அப்பின் பங்கு!

கர்நாடகத் தேர்தலில் வாட்ஸ் அப்பின் பங்கு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் வாட்ஸ் அப்பின் பங்கு கணிசமான அளவில் இருக்கும் என அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், வாட்ஸ்அப் குழுக்களின் பங்கு கணிசமான அளவில் உள்ளது. இந்தியாவில் சுமார் 20 கோடி வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் உட்பட முன்னணி கட்சிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் குழுக்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

2014ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனமானது வாட்ஸ்அப்பைக் கையகப்படுத்தியது. அமெரிக்கத் தேர்தலில் வாக்காளர்களின் தகவல்களைத் திருடியதாக, சமீபத்தில் பேஸ்புக் மீது குற்றம்சாட்டப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் மூலமாக இந்தத் தவறு நிகழ்ந்ததாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் ஒப்புக்கொண்ட நிலையில், இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழும் தேர்தல்களில் வாட்ஸ் அப் முக்கியப் பங்கு வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். சமீப காலத்தில் மியான்மர், இலங்கையில் மக்களிடையே நடந்த மோதல்களிலும் பேஸ்புக் வெளியிட்ட தவறான செய்திகளே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறான மற்றும் அரைகுறையான கருத்துகள், இரு கட்சிகளுக்கு இடையேயான தனிப்பட்ட மோதல் மற்றும் இந்து – முஸ்லிம் இடையேயான பகைமையை அதிகப்படுத்தும் கருத்துகள் அதிக அளவில் வாட்ஸ் அப்பில் பரப்பப்படுகின்றன. குழந்தை கடத்தல் பற்றிய தவறான தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரவியதால், கடந்த வாரம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இண்டர்நெட் பற்றிய அறியாத மக்கள், தங்களுக்குள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் பொதுவெளியில் வெளியாகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று டிஜிட்டல் உரிமைகள் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இதனைத் தடுக்க, பூம் என்ற உண்மை அறியும் இணையதளத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது பேஸ்புக். இதன் மூலமாக, எதிர்காலத்தில் வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் சரிபார்க்கப்படும்.

இந்திய அரசியல் மறும் அரசு சார்ந்த தகவல்களைச் சரிபார்க்கும் வேலைகளை பூம் செய்துவருகிறது. கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, தவறான செய்திகள் வாட்ஸ்அப்பில் பரவாமல் தடுக்கும் வேலையை இந்நிறுவனம் செய்து முடித்துள்ளது. இதன் நிறுவனர் கோவிந்தராஜ் எத்திராஜ், ‘தவறான தகவல்களைப் பரப்பும் விஷயத்தில், நீங்கள் பேய்களோடு உறவாடுகிறீர்கள்’ என்று வாட்ஸ் அப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

தொலைக்காட்சி, பத்திரிகை போன்றவற்றினால் புறக்கணிக்கப்படும்போது, தங்களது கருத்துகளை வெளியிட வாட்ஸ் அப் உதவிகரமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில நிர்வாகிகள். குறிப்பாக, அடிமட்ட அளவில் செயல்படுபவர்களிடம் இத்தகைய எண்ணம் உள்ளது. கர்நாடகத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக என இரு பெரிய கட்சிகளுமே வாட்ஸ் அப் குழுக்களைப் பெருமளவில் நம்பியிருக்கின்றன. அம்மாநிலத்தின் கடற்கரையோரத் தொகுதிகளில் வெற்றிபெற, வாட்ஸ் அப் குழுக்களையே பாஜகவும் காங்கிரஸும் நம்பியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். இன்று தேர்தல் முடிவுகளில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், அதில் வாட்ஸ் அப் குழுக்களின் பங்கு கணிசமான அளவில் இருக்கும் என்பது உறுதி.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon