மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 13 ஆக 2020

பாஜக வெற்றி: தலைவர்கள் கருத்து!

பாஜக வெற்றி: தலைவர்கள் கருத்து!

கர்நாடகத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுவரும் நிலையில், அதுகுறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு (மே 15) எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 12.30 மணி நிலவரப்படி காங்கிரஸை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தான் போட்டியிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், இது குறித்துப் பல்வேறு தலைவர்களும் பாஜகவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

மேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி

கர்நாடகாவில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தோல்வியடைந்தவர்கள் தொடர்ந்து போராடுங்கள். மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்

கர்நாடகத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. பிரதமர் மோடிக்குக்கும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக கர்நாடகாவின் புதிய முதல்வரை நேரில் சந்தித்துக் கண்டிப்பாக வலியுறுத்துவோம்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாகப் பொறுப்பேற்கும் பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

தமிழக பாஜக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்

இந்த வெற்றி பல கருத்துக்களை இந்தியாவிற்கு எடுத்துச் சொல்கிறது. பாஜக மீதும் பிரதமர் மீதும் மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்த மாநிலத்தையே காங்கிரஸ் இழக்கிறது என்றால், அவர்களால் வேறு எங்கேயும் வெற்றிப் பெற முடியாது. மஜதவுடன் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதனைத் தவிடுபொடியாக்கி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கிறது. பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம். எல்லாவற்றிற்கும் மேலாக, கர்நாடக மக்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்

ஆட்சியைப் பிடிக்காத மாநிலத்தில் புதிதாக ஆட்சியைப் பிடித்து பாஜக சாதனை நிகழ்த்திவிடவில்லை. தாங்கள் ஆட்சியை இழந்த மாநிலத்தைத்தான் மீட்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் வெற்றி பெற்றதால் தென் மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு கூடிவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்க்கவும் முடியாது. சித்தராமையாவின் தோல்வி எதிர்பாராதது. முதல்வராக மாநிலத் தலைமையில் இருப்பவர்கள் தான் போட்டியிடும் ஒரு தொகுதியிலேயே வெற்றிபெற வேண்டும். சித்தராமையா தோல்வி வருத்தப்படக்கூடியதுதான்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon