மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

மேற்கு வங்க வன்முறை: உள்துறை உத்தரவு!

மேற்கு வங்க வன்முறை: உள்துறை உத்தரவு!

மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் சிக்கி 13 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (மே 14) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 58,692 உள்ளாட்சி பிரதிநிதிகளில் 20,163 பேர் எந்தவித எதிர்ப்புமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள இடங்களுக்காக, நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை, மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 72.5 சதவிகித வாக்குகள் பதிவானதாகத் தெரியவந்துள்ளது.

இந்தத் தேர்தலின்போது, அம்மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதில் சிக்கி 13 பேர் வரை பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வாக்குச் சீட்டுகளை எரிப்பது, வாகனங்களை உடைப்பது மற்றும் தேர்தல் அதிகாரிகளைத் தாக்குவது போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இதனால், பல வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. 24 தெற்கு பர்கனாஸ், வடக்கு பர்கனாஸ், நாதியா, மூர்ஷிதாபாத், தெற்கு தினஜ்பூர் மாவட்டங்கள் வன்முறையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரே காரணம் என்று பாஜக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் வன்முறை சம்பவங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அமைதியை ஏற்படுத்த மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும், குற்றத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத் தேர்தல் வன்முறை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகப் படுகொலை என்று தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. கொல்கத்தா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை மேற்கு வங்க மாநில அரசு பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

“மேற்கு வங்க மாநில அரசு மற்றும் தேர்தல் கமிஷன் இரண்டும் அருவருப்பான முறையில் செயல்பட்டுள்ளன. அங்கு தனது மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதற்காகக் கொடிய வழிகளை திரிணாமூல் காங்கிரஸ் பின்பற்றியது இந்த வன்முறையின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதன்மூலமாக, அந்தக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இந்த வன்முறையைக் கண்டிப்பதோடு, இதை எதிர்த்துத் தொடர்ந்து போராடும்” என்று கூறியுள்ளார். மேலும், மேற்கு வங்கத் தேர்தல் வன்முறை குறித்து விரைவில் உண்மையறியும் அறிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வெளியிடும் எனவும் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பியான டெரிக் ஓ பிரையன், சீதாராம் யெச்சூரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியினரின் ஆட்சியிலும், மேற்கு வங்கத்தில் இதுபோன்று வன்முறை நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon