பஞ்சாப் சாலையில் நடந்த மோதலொன்றில் ஒருவர் உயிரிழந்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சாலையில் நடந்த மோதலொன்றில் குர்னம் சிங் என்பவரைத் தலையில் தாக்கினார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பஞ்சாப் மாநில அமைச்சருமான நவஜோத்சிங் சித்து. அப்போது, சித்துவுடன் இருந்த ரூபிந்தர் சிங் சாந்து தற்போது பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.
தாக்க்குதலுக்கு உள்ளான குர்னம்சிங், சில நாட்கள் கழித்து உயிரிழந்தார். 1988ஆம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக, சித்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில், சித்துவும் சாந்துவும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், 2007ஆம் ஆண்டு பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் சித்துவைக் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. சாந்துவும் இதில் தண்டனை பெற்றார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சித்து மேல் முறையீடு செய்தார். கடந்த மாதம் 14ஆம் தேதி நீதிபதி செலமேஸ்வர், சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தீர்ப்பு மே 15ஆம் தேதி வெளியாகுமென்று கூறப்பட்டது.
இந்த வழக்கில், இன்று (மே 15) காலை தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அப்போது, சித்துவுக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாண்டு சிறை தண்டனையில் தவறில்லை என்று வாதிட்டார் அம்மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர். இதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சித்து குர்னாம்சிங்கைத் தாக்கியது உண்மையென்றும், ஆனால் அதனால் குர்னம்சிங் மரணமடையவில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டனர். ஆனாலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்குத் தண்டனை வழங்கலாம் என்று கூறினர்.
“30 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம், முன்பகை ஏதும் இல்லாதது, ஆயுதங்கள் பயன்படுத்தப்படாதது மற்றும் குற்றம் நடந்த பின்னணியைக் கருத்தில் கொண்டு, ரூ.1000/- அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தண்டனை விவரத்தை அறிவித்தது உச்ச நீதிமன்ற அமர்வு.
இதன் மூலமாக, பல ஆண்டுகளாக சித்துவைத் துரத்தி வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.