விமானங்களில் பயணிக்கும் போது டேட்டா மற்றும் அழைப்புச் சேவைகளைப் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்துவதற்கான விரிவான ஆலோசனையில் தொலைத் தொடர்பு மற்றும் விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணங்களின் போது மொபைல் சேவையை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதற்கான ஒப்புதலைத் தொலைத் தொடர்பு ஆணையம் இம்மாதத் தொடக்கத்தில் வழங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து இத்திட்டத்திற்கான கொள்கை உருவாக்கத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் விமானச் சேவை நிறுவனங்களுடன் மே 14ஆம் தேதி டெல்லியில் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த விமான மொபைல் சேவைக்கான விதிமுறைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு விமானங்களில் இந்திய வெளிகளில் பயணிக்கும் மக்கள் தங்களது மொபைல் போன்களில் அழைப்பு மற்றும் டேட்டா சேவைகளைப் பெறமுடியும்.
உலகின் பல்வேறு நாடுகளில் விமானப் பயணத்தின் போது மொபைல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி உள்ளது. ஆனால் அந்த விமானங்கள் இந்திய வெளியைக் கடக்கும் போது மொபைல் சேவைகளை நிறுத்தியாக வேண்டும். இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களில் இந்திய விமானங்களில் மொபைல் சேவைகளைப் பயன்படுத்தும் வசதி நடைமுறைக்கு வந்துவிடும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கான செயல்பாட்டு மாதிரி குறித்த ஆலோசனைகள் நேற்றைய கூட்டத்தில் இடம்பெற்றிருந்தன. விஸ்தாரா, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது.