மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

டெப்பாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ்

டெப்பாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் 5977 வாக்குகளை மட்டுமே பெற்று டெப்பாசிட் இழந்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடந்தது மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றது.

யார் இந்த வாட்டாள் நாகராஜ்?

'கர்நாடகா சாலுவாலி வாட்டாள் பக்ஷா' என்ற கட்சி நடத்தி வருபவர் வாட்டாள் நாகராஜ். ஆறு முறை எம்.எல்.ஏ வாகவும் பதவி வகித்துள்ளார். காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளின் போது முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பது, தமிழக வாகனங்களை எரிப்பது போன்ற சம்பவங்களில் இவரது தொண்டர்கள் முன்னிலை வகிப்பார்கள். காவிரி பிரச்சனை வரும் போதெல்லாம் தமிழ் படங்களை கர்நாடக மாநிலத்தில் விடமால் தடுப்பதும் தமிழர்களை தாக்குவதும் வாட்டாள் நாகராஜ் கட்சியினரின் வாடிக்கையான செயலாகும். தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்தநிலையில், கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் வாட்டாள் நாகராஜ்.

டெப்பாசிட் இழப்பு:

இந்நிலையில், தற்போது நடந்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சாம்ராஜ் நகரில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தமிழில் பேசியும் வாக்கு கேட்டார். இந்நிலையில், இன்று வெளியான அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்டாள் நாகராஜ், வெறும் 5977 வாக்குகளை மட்டுமே பெற்றதோடு அல்லாமல் தனது டெப்பாசிட்டையும் இழந்து படுதோல்வி அடைந்துள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புட்ட ரங்க ஷெட்டி 75,963 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரையடுத்து 71,050 வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் மல்லிகார்ஜுனப்பா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 5977 வாக்குகளை பெற்றுள்ள வாட்டாள் நாகராஜ் 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon