மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

சர்க்கரைக்குக் கூடுதல் வரி விதிப்பு: தமிழகம் எதிர்ப்பு!

சர்க்கரைக்குக் கூடுதல் வரி விதிப்பு: தமிழகம் எதிர்ப்பு!

சர்க்கரைக்குக் கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக நேற்று டெல்லியில் நடைபெற்ற விவாதக் கூட்டத்தில் “சர்க்கரைக்குக் கூடுதல் வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை உடனடியாக கைவிட வேண்டும்” என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 27ஆவது கூட்டம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சர்க்கரைக்குக் கூடுதல் வரி விதிப்பது தொடர்பான முடிவு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதல் பெற்ற பிறகு சர்க்கரைக்கான கூடுதல் வரி விதிப்பை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் முடிவானது ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டங்களுக்கு எதிராக இருந்தாலும், சர்க்கரைக்கான கூடுதல் வரி விதிப்பு என்பது ஜிஎஸ்டி கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாகும். ஜிஎஸ்டி கவுன்சிலானது சர்க்கரைக்குக் கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக ஐந்து மாநில அமைச்சர்கள் அடங்கிய குழு விவாதித்து பரிந்துரைகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஐந்து மாநில அமைச்சர்கள் அடங்கிய குழுவையும் ஜிஎஸ்டி கவுன்சிலே அறிவித்தது. அசாம் மாநில நிதியமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மா தலைமையிலான குழுவில் உத்தரப் பிரதேச நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால், மகாராஷ்டிர நிதியமைச்சர் சுதிர் முன்கடிவர், கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்த குழுவின் முதல் கூட்டம் நேற்று (மே 14) டெல்லியில் நடைபெற்றது. அசாம் நிதியமைச்சர் ஹிமண்டா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சர்க்கரைக்குக் கூடுதல் வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக எதிர்த்தார். மேலும் சர்க்கரைக்குக் கூடுதல் வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.

பல்வேறு கட்ட விவாதத்துக்குப் பின்னர் இந்தக் குழுவின் அடுத்த சந்திப்பானது, ஜூன் 3ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என்று தலைவர் ஹிமண்டா பிஸ்வா சர்மா அறிவித்தார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon