மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

அபியும் அனுவும்: அழுத்தமான காதல் கதை!

அபியும் அனுவும்: அழுத்தமான காதல் கதை!

பியா பாஜ்பாய் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் மே 25ஆம் தேதி அபியும் அனுவும் திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள அனு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் பொருத்தமானவராக இருந்ததாக இயக்குநர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பியா பாஜ்பாய், டோவினோ தாமஸ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இதன் இயக்குநர் விஜயலட்சுமி ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் ஆவார். தரண்குமார் இசையமைத்துள்ளார். சுஹாசினி, பிரபு, ரோகிணி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இயக்குநர் விஜயலட்சுமி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். "அபி மற்றும் அனு கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, அவர்களின் புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களைக் கடக்க வேண்டி வருகிறது. கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தைக் கொடுக்கும்பொழுதே டோவினோ தாமஸ், பியா பாஜ்பாயை உடனடியாகப் பொருத்திப் பார்த்தேன். அந்தக் கதாபாத்திரங்கள் கச்சிதமாகப் பொருந்துகின்றன. படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் தங்களைப் பிரதிபலிப்பதை உணர்வார்கள்" என்று விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுவருகின்றன. பாடல்கள் குறித்துப் பேசியுள்ள விஜயலட்சுமி, "தரண் அவரது முதல் படத்தில் இருந்தே சிறந்த காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் திறமை வாய்ந்தவர். அவரது அனைத்துப் படங்களின் ஆல்பங்களுமே எப்போதும் கேட்கக்கூடிய வகையில் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களிலும் அவரது இசை அறிவு வியக்கவைக்கிறது. தரண் இசை மதன் கார்க்கியின் அற்புதமான பாடல் வரிகளோடு இணையும்போது அது படத்தை வேறு தளத்திற்கு கொண்டுசெல்கிறது" என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon