மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

புழக்கத்தில் தொடரும் ரூ.2,000 நோட்டு!

புழக்கத்தில் தொடரும் ரூ.2,000 நோட்டு!

புதிய 2000 ரூபாய் நோட்டுகளை இப்போதைக்கு திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய மோடி அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு வங்கிகள் வாயிலாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதிக மதிப்பிலான பணத்தை பதுக்குவது எளிதாக இருக்கும் என்று கூறி, ரூ.1000 நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்த மத்திய அரசு அதை விட அதிக மதிப்பு கொண்ட ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டது பல்வேறு தரப்பில் சர்ச்சையைக் கிளப்பியது. எனவே இந்நோட்டுகள் விரைவில் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்தூரில் மே 14ஆம் தேதி செய்தியாளர்களிடையே இதுகுறித்துப் பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சரான சிவ் பிரதாப் சுக்லா, “கடந்த சில மாதங்களாக நிலவிவந்த நிதி நெருக்கடிப் பிரச்சினைக்குத் தீர்வளிக்கப்பட்டுள்ளது. ரூ.500 நோட்டுகள் போதுமான அளவுக்கு அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இப்போது நாட்டிலுள்ள ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. புதிய நோட்டுகளை வழங்கும் வகையில் ஏடிஎம் எந்திரங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், புதிய ரூ.2,000 நோட்டுகளைத் தற்போது புழக்கத்திலிருந்து நீக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று கூறிய அவர், பெட்ரோலியம் பொருட்களைச் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon