மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

ராக்கெட் ராஜாவை விடுவிக்கக் கோரி அரசு பஸ் எரிப்பு!

ராக்கெட் ராஜாவை விடுவிக்கக் கோரி அரசு பஸ் எரிப்பு!

நெல்லையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் அரசு பேருந்தை எரித்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

நெல்லை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு தழையூத்துக்கு இன்று (மே 15) காலையில் ஒரு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்தனர். அவர்களது கையில் பெட்ரோல் கேன் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்தனர்.

பேருந்தினுள் ஏறிய மர்ம நபர்கள் இருவரும் பயணிகளையும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரையும் கத்தி முனையில் பேருந்தில் இருந்து இறங்கச் செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் பேருந்துக்கு தீ வைத்தனர்.

ராக்கெட் ராஜாவைக் கைது செய்த காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்தும், ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுமையாக எரிந்து கருகிவிட்டது.

இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், தழையூத்து துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, பயணிகளிடமும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடமும் மர்ம நபர்களைக் குறித்து விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon