மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

நிகழ்களம்: உணவை அமுதமாக்கும் இளைஞர்!

நிகழ்களம்: உணவை அமுதமாக்கும் இளைஞர்!

ர.ரஞ்சிதா

சமீபத்தில் ஒருநாள் ஹோட்டலுக்குப் பிரியாணி சாப்பிடலாம் என்று சென்றேன். பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தேன். அப்போது, எனக்கு அருகில் இருக்கும் டேபிளில் குழந்தையுடன் ஒரு குடும்பம் வந்து அமர்ந்தது. நான் ஆர்டர் செய்த பிரியாணியும், அவர்கள் ஆர்டர் செய்ததும் வந்தன. பசியில் இருந்த நான் சாப்பிடலாம் என்று பிரியாணியை வாயில் எடுத்து வைத்தபோது அரிசி வேகாமல் பிளாஸ்டிக் அரிசிபோல இருந்தது. அருகில் இருந்தவர்களும் அதையே சொன்னபோது, "எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்" என்று அந்தக் குழந்தை கேட்டது. அதற்கு குழந்தையின் அம்மா, "ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிடக் கூடாது; உடம்புக்கு நல்லதில்லை” என்று சொல்ல, உடனே அந்தக் குழந்தை, “இந்த பிரியாணி மட்டும் உடம்புக்கு நல்லதா?” என்று கேட்டது.

குழந்தை இப்படிக் கேட்டது என்னை யோசிக்க வைத்தது.

பிரியாணி பிளாஸ்டிக் அரிசி போல் இருக்கிறது; ஐஸ்க்ரீம் உடம்புக்கு ஆகாது; அப்படியென்றால் இவற்றைச் செய்வதற்கான உணவுப்பொருள்களை மாற்றி, நமது பாரம்பரிய சிறுதானியங்களில் அவற்றைச் செய்யலாமே என்று தோன்றியது. அப்படித் தோன்றியபோது, அதை நடைமுறையில் செயல்படுத்திவரும் அந்த இளைஞர் ஞாபகத்துக்கு வந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் ‘அருந்தானிய உணவகம்’ என்ற ஒன்றைஅமைத்து, குறைந்த விலையில் மக்களுக்கு நஞ்சில்லா உணவை வழங்கிவருபவர் அவர்.

கிராமத்து இளைஞர்களின் கனவு பெரும்பாலும் நகரத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்றே இருக்கும். ஆனால் பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலத்தைச் சேர்ந்த இந்த மாதேஸ்வரன் வித்தியாசமானவர். சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் கைநிறையக் காசு தந்த வேலையை உதறிவிட்டு, கிரமத்திற்குத் திரும்பியவர் மாதேஸ்வரன். "கைநிறைய சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு ஊருல வந்து ஆடு, மாடு மேய்ச்சிக்கிட்டு, விவசாயம் பண்ணப் போறியா; உனக்கு என்ன பைத்தியமா என்று அப்பா, அம்மா, எல்லோருமே என்னை திட்டுனாங்க. அதனால என்னோட குறிக்கோளில் இருந்து பின்வாங்கி இருந்தேன்னா, இன்னைக்கு அருந்தானிய உணவகம் என்ற இந்த சாதனையை எட்டியிருக்க முடியாது” என்று மனநிறைவுடன் சொல்லும் மாதேஸ்வரனுக்குச் சிறு வயதிலேயே விவசாயத்தின் மீது ஈடுபாடு உண்டு. அப்பாவுக்கு துணையாக வேலைசெய்துவந்தார். டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டுச் சென்னையில் பன்னாட்டு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த இவருடைய மனம் அந்தப் பணியில் ஒன்றவில்லை.

“தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர் ஆகியவை வறட்சி மாவட்டங்கள். அரசே இதை அறிவித்துள்ளது. விவசாயம் செய்யப் போதிய தண்ணீர் வசதி கிடையாது. ஆனால், பெரம்பலூர் மாவட்டம் சிறுதானியத்திற்குப் பெயர் பெற்றது. அதுவும் காலப்போக்கில் மறைந்துவிட்டது. இப்போது விவசாயிகள் மீண்டும் சிறுதானியம் பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது” என்று தன் வாழ்க்கைப் பாதி மாறிய கதையை நினைவுகூர்கிறார் மாதேஸ்வரன்.

இனி ஒரு விதி செய்வோம்

சமூக அக்கறை கொண்ட இவர், ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற சமூக அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். குளங்களைத் தூர்வாருதல், மழை நீர் சேகரிப்பு, சாக்கடைக் கழிவுகளைச் சுத்தம் செய்தல், மரம் நடுதல் போன்ற சேவைகளை இந்த அமைப்பின் மூலம் செய்துவருகிறார். பிரச்சினைகள் ஏற்பட்டால் போராட்டங்களும் செய்வோம் என்கிறார்.

இயற்கை முறையில் விவசாயம்

இயற்கை வழி வேளாண்மையை ஊக்குவித்த நம்மாழ்வாரைப் பின்பற்றி இயற்கை விவசாயத்திற்குள் இறங்கிய இவர், மாவட்டத்தின் பல பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைச் சந்தித்து ஆலோசனை பெற்றார். “எங்களுக்கு சொந்தமா 1 ஏக்கர் நிலம் உண்டு. 4 ஏக்கர் குத்தகைக்கும் எடுத்து விவசாயம் செய்யுறோம். செயற்கை உரம் போட்டு விவசாயம் பண்ணதால உணவு நஞ்சா இருக்கறத உணர்ந்தேன். இது பற்றி பலரிடம் ஆலோசனை கேட்டேன். அப்படி ஆலோசனை பெற்றுதான் இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். நம்ம பாரம்பரிய அரிசியான குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம், கம்பு எல்லாமே இயற்கை முறையில் பயிரிடுறோம். இதற்கு மானாவாரி பயிர்கள்னு பேரு” என்கிறார் மாதேஸ்வரன்

பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பிலும் இணைந்த இவருக்குச் சித்த மருத்துவர் கு.சிவராமன் அறிமுகம் ஆனார். சிறுதானிய உணவைப் பற்றி அவர் கூறியது, இவர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. “உணவே மருந்து என்ற பழமொழியத்தான் சிவராமன் ரொம்பவும் வலியுறுத்தினார். அதிலிருந்து எல்லாருக்கும் நஞ்சில்லா ஆரோக்கியமான உணவுகளை வழங்கணும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு ஏற்ற வழியாகத்தான் ‘சிறுதானிய உணவகம்’ அமைத்தேன்” என்று தன் தொடக்கத்தை நினைவுகூர்கிறார்.

களம் அமைத்துத் தந்த ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸுடன் மாதேஸ்வரனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. மாவட்டத்தில் ஒரு சமயம் புத்தகத் திருவிழா நடைபெற இருந்தது. அதில் நொறுக்கு தின்பண்டங்களை தவிர்த்து, சிறுதானிய உணவு வகைகளைக் கொடுக்க முடியுமா என்று ஆட்சியர் இவரிடம் கேட்டிருக்கிறார். இவரும் ஒப்புக்கொண்டு நண்பர்கள் உதவியோடு செயலில் இறங்கினார். குறைந்த விலையில் தூதுவளை, முடக்கத்தான் போன்ற மூலிகைகள், கீரைகளின் சூப், ஆவாரம்பூ, முளைக்கட்டிய பயிர், சிறுதானிய பிஸ்கட் போன்றவற்றைப் புத்தகத் திருவிழாவில் வழங்கினார்கள். ஒரு வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது. இதைப் புத்தகத் திருவிழா மேடையில் சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் கு.ஞானசம்பந்தம், மாவட்ட ஆட்சியர் மூவரும் பாராட்டிப் பேசினார்கள். “இதனால், இங்குள்ள மக்கள் மத்தியில் சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு பரவலானது. இது என் வாழ்க்கையின் முதல் வெற்றிப் படியாக அமைந்தது. இதற்கான களத்தை அமைத்துத் தந்த மாவட்ட ஆட்சியர் என் நெஞ்சில் நிறைந்தார்” என்று நன்றியுடன் கூறுகிறார் மாதேஸ்வரன்.

பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் ‘அருந்தானிய உணவகம்’ என்ற பெயரில் சிறுதானிய உணவகங்களைத் திறந்தார். இவை வெற்றிகரமாக நடந்துவருகின்றன. அரசு அதிகாரிகள் மீட்டிங் நடக்கும்போதெல்லாம் சிறுதானிய உணவுகளை வழங்கிவருகிறார். பெரம்பலூரைத் தொடர்ந்து அரியலூர் புத்தக கண்காட்சியிலும் இவர் அமைத்த அருந்தானிய உணவகம் பொதுமக்களிடம் பேராதரவைப் பெற்றுள்ளது.

சிறுதானிய விவசாயக் குழுவில் இருந்து சிறுதானியத்தை நாங்கள் வாங்கிச் செய்கிறோம். ‘அருந்தானியம்’ என்ற பெயரில் ஓர் இணையதளம் ஆரம்பித்து, சிறுதானிய விளைபொருட்களை அனைத்து மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

களம் அமைத்துத் தந்த கலெக்டர் டாக்டர் தரேஸ் அகமதுக்குப் பிறகு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நந்தகுமார் புதிய கலெக்டராகப் பொறுப்பேற்றார். இவர் மாதேஸ்வரனின் முயற்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவினார். குழந்தைகளை ஈர்க்கும் வகையில் பிஸ்கெட், லட்டு போன்ற சிறுதானியத் தின்பண்டங்கள் தயாரிக்கத் தொடங்கினார் மாதேஸ்வரன். கூடவே, திருமணங்களுக்கும் சிறுதானிய உணவு வகைகளையும் செய்துகொடுக்க ஆரம்பித்தார். வரகு பிரியாணி, கம்பு சாதம், குதிரை வாலி தயிர் சாதம் என திருமணங்களில் புதுவிதமாக உணவு வகைகளை பரிமாறுகிறது இவருடைய ‘அருந்தானிய உணவகம்’.

சிறுதானிய ஐஸ்கிரீம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும். அதிலும் கோடைக்காலத்தில் ரொம்பவும் பிடிக்கும். அந்த ஐஸ்கிரீமையும் இவர் விடவில்லை. ஐஸ்கிரீமில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைப்பதை அறிந்த மாதேஸ்வரன். சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் செய்தார். சிறுதானியத்தில் நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம் ஆகியவற்றைப் போட்டுச் செய்கிறார்கள். மா, பலா போன்ற பழங்களிலும் இங்கே ஐஸ்கிரீம் செய்யப்படுகிறது.

கம்பு ஐஸ்கிரீம், கேழ்வரகு ஐஸ்கிரீம், திணை ஐஸ்கிரீம், சோளம் ஐஸ்கிரீம், முலாம்பழ ஐஸ்கிரீம், பலாப் பழ ஐஸ்கிரீம், இஞ்சி ஐஸ்கிரீம் போன்ற ஐஸ்கிரீம் வகைகளையும் ‘அருந்தானிய உணவகம்’ வழங்குகிறது.

பன்னாட்டு நிறுவனத்தில் ஊழியராக இருந்த மாதேஸ்வரன், இன்று 25 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்திலும் இரண்டு இடங்களிலும், உடுமலைப்பேட்டையிலும் ‘அருந்தானிய உணவகங்கள்’ செயல்படுகின்றன.

“என்னுடைய நோக்கம் மக்களுக்கு நஞ்சில்லா உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்தச் சிறுதானிய உணவு வகைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் தொழில் முனைவோரையும் உருவாக்குகிறோம். 2020க்குள் பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தது 100 தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று தன் வெற்றிக் கதையைப் பெருமையோடு பகிர்ந்துகொள்கிறார் மாதேஸ்வரன்.

ஒரு செயல் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பார்கள். இன்று உணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் நஞ்சாகிவருவது குறித்து புலம்பல்களையும் புகார்களையும் ஆயிரக்கணக்கில் கேட்டுவருகிறோம். ஆனால், விமர்சிப்பதோடு நின்றுவிடாமல் மாற்றத்தைச் செயல்பூர்வமாக முன்னெடுக்கும் மாதேஸ்வரனைப் போன்றோர் நம் காலத்துக்கான முன்னுதாரணங்கள் என்று துணிந்து சொல்லலாம்.

தொடர்புக்கு: மாதேஸ்வரன்- 9715404688

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon