மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

அயர்லாந்தின் அதிர்ச்சி வைத்தியம்!

அயர்லாந்தின் அதிர்ச்சி வைத்தியம்!

பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி அயர்லாந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

பாகிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 310 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் துவக்கிய அயர்லாந்து அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தது.

பின்னர் ஃபாலோ ஆனைப் பெற்று அயர்லாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இம்முறை அயர்லாந்து வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எட் ஜாய்ஸ் (43), வில்லியம் போர்ட்டர்ஃபீல்டின் (32) தொடக்க ஜோடியின் சிறப்பான ஆட்டம் மற்றும் மிடில் ஆர்டரில் கெவின் ஓ பிரைனின் (118) அறிமுக சதம், அந்த அணிக்கு 159 ரன்கள் முன்னிலையைப் பெற்றுத்தந்தது. சிறப்பாகப் பந்து வீசிய பாகிஸ்தானின் முகமது அப்பாஸ் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 110 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

160 என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அயர்லாந்து அணி தனது மிரட்டலான பந்துவீச்சின் மூலம் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அசார் அலி (2), ஹரிஸ் சோஹெய்ல் (7), அசாத் ஷபிக் (1) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். பாகிஸ்தான் அணி சற்று முன் வரை 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் கற்றுக்குட்டியான அயர்லாந்து அணி, பலம் வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அயர்லாந்து அணி வரலாற்றுச் சாதனை படைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon