மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

சிபிஐ வளையத்தில் வங்கியாளர்கள்!

சிபிஐ வளையத்தில் வங்கியாளர்கள்!

மின்னம்பலம்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சம்பந்தப்பட்ட வங்கியாளர்கள் சிலரது பெயரை சிபிஐ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் அலகாபாத் வங்கியின் தலைமைச் செயலதிகாரியான உஷா அனந்த சுப்ரமணியனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சிபிஐ அமைப்பினர் தங்களது நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியும், தற்போது அலகாபாத் வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருமான உஷா அனந்த சுப்ரமணியன் சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.அவருடன் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர்களான கே.வி.பிரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் ஷரன் ஆகியோரது பெயரும் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் புளூம்பெர்க் ஊடகத்திடம் பேசுகையில், “இந்த நிதி மோசடி வழக்கில் முதற்கட்டமாக நீரவ் மோடிக்கு எதிராகவும், பின்னர் மெஹுல் சோக்சிக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீரவ் மோடிக்குச் சொந்தமாக வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு இங்கிருந்து பணப் பரிவர்த்தனை மோசடியான வகையில் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மீதும், தற்போது சில வங்கித் தலைமைகள் மீதும் ஐபிசி 120 பி, 420 மற்றும் 409 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

தற்போது சிபிஐ விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ள உஷா அனந்த சுப்ரமணியன் 2015 ஆகஸ்ட் முதல் 2017 மே மாதம் வரையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon